உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு..? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில், உதயநிதி தற்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடு இருப்பதாகக் கூறி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உதயநிதி ஸ்டாலின் 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தற்போதைய தேர்தல் வேட்பு மனுவில் அந்த விவரங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனை தொடர்பாக முறையான விளக்கங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. கடந்த 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் உதயநிதி ரூ. 11.6 கோடி ஸ்னோ ஹவுஸிங் என்ற நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், தற்போது ரூ. 10 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய ரூ. 1 கோடியே 6 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
2020 ஆம் ஆண்டுக்கு முன்பாக தனக்கு ரூ. 2 கோடி அளவுக்கு வருமானம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி, தற்போது ரூ. 10.98 கோடி அளவுக்கு வருமானம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வருமானம் மற்றும் சொத்து அதிகரிப்புக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. தனக்குள்ள சொத்துகள் குறித்து முரண்பாடான தகவல்களை வேட்பாளர்கள் வேட்பு மனுவில் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.
எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறையின் புலனாய்வு அமைப்புக்கும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications