விஜய்க்கு எந்த அழுத்தமும் இல்லை! அன்புமணிக்கு இருக்கலாம்! மாணிக்கம் தாகூர் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கிறார்கள். அவர்களை மக்கள் நினைிவல் கொள்வார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மேலும் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டுமாறு தவெகவுக்கு காங்கிரஸ் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிதாகக் கூறுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

Manickam Tagore

பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியபோதே காங்கிரஸ் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் குறிப்பாக பெண்கள் தொடர்பான முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் பட்ஜெட்டின் தொடக்கம் நல்ல நிலையில் உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் முதலமைச்சர் கூட்டியுள்ளார் என்று கூறுவது தவறானது. காங்கிரஸ் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அழுத்தம் கொடுக்கும் கட்சி அல்ல.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு உண்மையில் அழுத்தம் இருக்கலாம். அது பாஜகவிடமிருந்தோ, பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்தோ இருக்கலாம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கொண்டு வரும் நடவடிக்கையை அன்புமணி ராமதாஸ் ஆதரிப்பாரா என்பதுதான் அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் பேச வேண்டும். ஆனால், அதுகுறித்து பேசாமல் இருக்கும் கட்சிகளில் அவரது கட்சியும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே, முதலில் இதுகுறித்து அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக முதலமைச்சர் விஜயை பொறுத்தவரை, யாருடைய அழுத்தத்துக்கும் அவர் பணிந்து செயல்படக் டியவர் அல்ல. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்ற தெளிவான முடிவை அவர் எடுத்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை மட்டும் அழைத்திருந்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அழைத்திருக்கலாம். ஆனால், முதலமைச்சர் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளார். இது நல்ல தொடக்கம்.

தான் 2009-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருவதாகவும், இதுவரை தான் பார்த்த ஐந்து முதலமைச்சர்களில் யாரும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஒரு முக்கியமான விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதில்லை. அந்த வகையில் முதல்முறையாக அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை நடத்துவது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தின் வருங்காலத்தை தீர்மானிக்கக் கூடிய மிக முக்கியமான விவகாரம் தொகுதி மறுசீரமைப்பு. இதுபோன்ற ஒரு முக்கியமான நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொள்ளும் நிலையில், அதனை அன்புமணி ராமதாஸ் கொச்சைப்படுத்துவது வருத்தமளிக்கிறது.

காவிரி, மேகதாது விவகாரங்களைப் பொறுத்தவரை அன்புமணி ராமதாஸ் அரசியல் செய்வதற்காக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறி வந்தனர். ஆனால், இயற்கை மற்றும் காவிரி தாயை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தற்போது காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், காவிரிக்காக ஏற்கெனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது தண்ணீரும் வந்துவிட்ட நிலையில், மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

ஒருவரது அரசியல் ஈகோவுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தற்போது தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமான பிரச்சனை தொகுதி மறுசீரமைப்பு. மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து, அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் சதி நடைபெறுகிறதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நிலை உள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்று கூறும் அன்புமணி ராமதாஸ், அவருக்கு ஆதரவளித்து வரும் மத்திய அரசிடம் தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் சில நாள்களுக்கு முன்பு டெல்லியில் இருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தால் மத்திய அரசுக்கான தனது ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் முதலமைச்சர் விஜய்க்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். காவிரி மற்றும் மேகதாது போன்ற விவகாரங்களை வைத்து தேவையற்ற அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது தொடர்பாக அரசியல் பேசிக் கொண்டிருந்ததே காரணம். தற்போது தண்ணீர் வந்துள்ள நிலையில், சம்பா சாகுபடிக்காவது உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். தமிழகத்தில் சரியான நேரத்தில் போதிய மழை பெய்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத நிலை உருவாக வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செல்ஃபி வீடியோக்களை வெளியிடுவதிலும், அரசியல் செய்வதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகளின் பிரச்சனையை திசைதிருப்பினால் இறுதியில் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான்.

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகிய மூவருக்கும் தொடர்பு உள்ளது. அணை கட்டுவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியம். தமிழக அரசிடமும் ஒத்துழைப்பு கோரப்பட வேண்டும். கர்நாடகத்தில் அணையை கட்ட வேண்டிய பொறுப்பு அங்குள்ள அரசுக்கு உள்ளது.

எனவே, மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் விரும்பினால், முதலில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அதனைச் செய்யாமல் மற்ற தலைவர்களைப் பற்றி விமர்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை.

ராகுல் காந்தி, பிரகாஷ் காரத், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்திப்பதைவிட, மேகதாது அணை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் பேசுவதே முக்கியம். பிரதமர், கர்நாடக முதலமைச்சர், தமிழக முதலமைச்சர் ஆகியோருடன் தொடர்புடைய பிரச்னை இது.

காவிரியில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அரசியல்வாதிகள் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில், இயற்கையாக பெய்த மழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் இருந்து கொண்டு தண்ணீர் வர வேண்டிய அளவு, வழங்க வேண்டிய அளவு குறித்து தொடர்ந்து பேசுவதைவிட, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதா என்பதை நேரில் பார்ப்பதே முக்கியம். தண்ணீர் வரத் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே கூறிய அரசியல் கருத்துகளை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

திமுக ஆட்சியில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி புதிய திட்டங்களாக அறிவிப்பதாக அதிமுக தரப்பில் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டாலும் அது தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறதா என்பதுதான் முக்கியம். திட்டம் நிறுத்தப்பட்டால் மட்டுமே அதுகுறித்து கேள்வி எழுப்ப முடியும். திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெயர் மாற்றத்தை மட்டும் விமர்சிப்பதில் பயனில்லை என்றார்.

மின்சாரக் கட்டண உயர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது என்ற கருத்து தொடர்ந்து மக்களிடையே இருந்து வருகிறது. இதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கக்கூடும். எனவே, மின்சாரத் துறை அமைச்சர் இதுகுறித்து உரிய கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+