வாய் தவறி தெரியாமல் பேசிவிட்டேன்.. ஜாமீன் கோரி மீரா மிதுன் மனு தாக்கல்
சென்னை : வன்கொடுமை தடை சட்டத்தில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வாய் தவறி தெரியாமல் பேசிவிட்டதாக மனுவில் கூறியுள்ளார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்கள் மற்றும் மக்கள் பற்றி அவதூறாக பேசியதால் நடிகை மீரா மிதுன் பெரும் சர்ச்சையில் சிக்கினார்,
இதனால் சமூக வலைதளங்களில் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பலர் அவரது சர்ச்சை பேச்சு வீடியோவை பதிவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீரா மிதுன், போலீசுக்கே சவால் விட்டார்.

விசிக புகார்
இதனிடையே மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவானார்.

வீடியோ வெளியீடு
இதையடுத்து தேடி வந்த சென்னை போலீசார் , செல்போன் சிக்னலை வைத்து மீரா மிதுனை கேரளாவில் வைத்து கைது செய்தனர். அப்போது அலறியபடி வீடியோ வெளியிட்டு மீரா மிதுன் பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும் அவரை கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைத்துவந்தனர். அத்துடன் அவரை சென்னையில் வைத்து விசாரித்துவிட்டு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆண் நண்பரும் கைது
நீதிமன்றம் அவரை ஆகஸ்ட் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அவரது ஆண் நண்பர் ஷாப் அபிஷக்கும் கைது செய்யப்பட்டார். சென்னை போலீசார் பல்வேறு கோணங்களில் மிரா மிதுனிடம் துருவித்துருவி விசாரணை செய்துவரும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் இவரது யூடியூப் சேனலை முடக்க கடிதம் அனுப்பி உள்ளார்கள்.

மீரா மிதுன் மனு
இந்நிலையில் ஜாமின் கோரி, நடிகை மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னைப்பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசியதாக ஜாமின் மனுவில் நடிகை மீரா மிதுன் கூறியுள்ளார்,
Recommended Video

தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்
ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மீரா மிதுன் உத்தரவாதம்
நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டேன் எனவும் மனுவில் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த மனு சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications