சென்னையில் மெட்ரோ பணி.. மெரினாவில் உள்ள காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றம்.. இடத்தேர்வு பணி தீவிரம்
சென்னை: மெட்ரோ ரெயில் அமைக்கும் பணிக்காக சென்னை மெரினாவில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இந்த பணிகளினால் இங்குள்ள காந்தி சிலை சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக சிலை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
சென்னையின் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மெரினாவில் மெட்ரோ பணி
தற்போது சென்னை மெரினாவில் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பாதைகள் அமைப்பதற்காக சுரங்க பணிகள் மும்முரமாக நடைபெற்றும் வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலைகளில் இந்த சுரங்கப்பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகளில் இருபுறமும் இரும்பு வேலியிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காந்தி சிலை அகற்றப்படுகிறது
இந்த நிலையில் இந்த சுரங்க பணியின் போது சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை சேதமடைந்துவிட கூடாது என்பதற்காக பணிகள் முடியும் வரை தற்காலிகமாக காந்தி சிலையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி சிலையை வேறு இடத்தில் வைப்பதற்கான இடத்தேர்வு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடற்கரையில் உள்ள காந்தி சிலை சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இடம் தேர்வு செய்யும் பணி
சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற சென்னை மாநகராட்சியும் தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் பொதுப்பணித்துறையும் காந்தி சிலையை மெரினா கடற்கரையிலேயே வேறு இடத்தில் வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தற்காலிகமாக வேறு இடத்தில்
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை நிறுவப்படும். அதுவரை மட்டும் காந்தி சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவின் அடையாளமாகவும் காந்தி சிலை இருந்து வருகிறது. கடந்த 1959-ம் ஆண்டு நாட்டின் அப்போதைய பிரதமர் நேருவால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை மெரினாவில் நம்ம சென்னை செல்பி மேடையை சுற்றிய பகுதிகளும் மெட்ரோ பணியின் காரணமாக சுற்றிலும் அடைப்புகள் வைத்து மூடப்பட்டு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications