உங்க குழப்பத்தை மறைக்க கட்டுக்கதை விடவேண்டாம்.. 'மருந்து தட்டுப்பாடு?’ எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி!
சென்னை : கால்நடை மருந்துகள் பற்றாக்குறையால், தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் திமுக அரசு வதைக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
அ.தி.மு.கவுக்குள் நடக்கும் உட்கட்சி குழப்பத்திற்கு திரை போட்டு மறைக்க, கற்பனை குற்றச்சாட்டுகளை, அடிப்படை ஆதாரமின்றி, 'அறிக்கை' என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர் வெளியிட வேண்டாம் என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாடுகளுக்கு வேண்டிய மருந்துகளை இதுவரை தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் இந்தாண்டு தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை என்று குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
ஆறறிவு உள்ளவர்கள் மட்டுமல்ல, ஐந்தறிவுள்ள கால்நடைகளின் வயிற்றிலும் அடிப்போம் என்ற குறிக்கோளோடு திமுக அரசின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என எடப்பாடி பழனிசாமி சாடினார்.
கால்நடை மருந்துகள் தட்டுப்பாடு! வாயில்லா ஜீவன்களின் வயிற்றில் அடிப்பதாக எடப்பாடி பரபரப்பு புகார்!

கட்டுக்கதை
இந்நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை விட்டுள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "எடுத்தோம், கவிழ்த்தோம்" என்று உண்மைக்கு புறம்பாக பல கட்டுக்கதைகளை அறிக்கையாக அவிழ்த்து விட்டுள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படக்கூடாது எனும் கொள்கையுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு கால்நடைகளின் உடல்நலம் பேணுதலில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் சுமார் 95 லட்சம் மாட்டினங்கள் உள்ளன. தேசிய கோமாரி நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தேவைப்படும் கோமாரி நோய்த் தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கோமாரி
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அனைத்து மாட்டினங்களுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கோமாரி நோய்த் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் சுமார் 90 லட்சம் மாட்டினங்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு ஒன்றிய அரசிடமிருந்து கடந்த செப்டம்பர் 2020-ல் பெறப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகளைக் கூற பெறாமல் கோட்டை விட்டதுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து நேரடியாகவும், கடிதங்கள் மூலமும், அழுத்தம் கொடுத்ததன் விளைவாக செப்டம்பர் 2021-முதல் ஜூன் 2022 வரை நான்கு தவணைகளாக 87 லட்சம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு- கால்நடைகளுக்கு தடுப்பூசித் திட்டம் திறமையாக நடத்தப்பட்டது கழக ஆட்சியில்தான் என்பதை எதிர்கட்சி தலைவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தடுப்பூசி பணிகள்
இந்த வருடம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பூசி பணிகளுக்கும் முன்கூட்டியே- கடந்த ஜூன்-2022, ஜூலை-2022, ஆகஸ்ட்-2022 ஆகிய மாதங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் மூலமாகவும், செப்டம்பர்- 2022-ல் தலைமைச் செயலர் மூலமாகவும் ஒன்றிய அரசுக்கு கடிதம் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டு- அந்த 90 லட்சம் தடுப்பூசிகளையும் டிசம்பர் 2022-க்குள் வழங்கி விடுவதாக ஒன்றிய அரசு 24.11.2022 அன்று உறுதியளித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கோமாரி நோயின் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் அவசர தேவைகளுக்கு என சுமார் ஐந்து லட்சம் கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் அரசிடம் கையிருப்பில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக- பருவமழை காலத்தில் ஏற்படும் நோய்த்தாக்கத்தை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லையோர கிராமங்களில் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உண்மை நிலை
சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் திரித்து அறிக்கை வெளியிடும் முன்பு உண்மை நிலையை சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் மாட்டினங்களுக்கு தோல் கழலை நோய் என்ற நோயின் தாக்கம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. வட இந்திய மாநிலங்களில் சுமார் 70,000 மாட்டினங்களுக்கு மேல் உயிர்ச் சேதம் ஏற்படுத்திய இந்த நோய்க்கு இந்திய அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும்- ஒன்றிய அரசு மற்றும் கால்நடை மருத்துவ நிபுணர்கள் ஆட்டம்மை நோய் தடுப்பூசியை தோல் கழலை நோய்க்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்துனர். அதன் அடிப்படையில் இருபது லட்சம் டோஸ் ஆட்டம்மை நோய் தடுப்பு மருந்து தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டு நோய் பாதித்த பகுதிகளில் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தமிழக அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் இந்த நோயின் தாக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

மூடி மறைக்க அபாண்ட அறிக்கை
இதுகூட எதிர்கட்சித் தலைவருக்கு தெரியாமல் இருப்பது கடந்த ஆட்சி காலத்தில் வருடந்தோறும் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அறிக்கையில் கதை அளந்திருக்கிறார். அப்போது நடத்தப்பட்டது வெறும் 5500 முகாம்கள் மட்டுமே! ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் இத்துறையின் மூலமாக கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கழக ஆட்சியில் ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் 7760 முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதில்கூட கடந்த ஆட்சியை விட அதிக அக்கறை காட்டுவது கழக ஆட்சிதான் என்பதை மூடி மறைக்க இப்படி அபாண்டமாக அறிக்கை விடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் என்றே தோன்றுகிறது.

பொய் அறிக்கை விடும் பழனிசாமி
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மனிதர்களுக்கு இணையாக கால்நடைகளுக்கும் உயர்தர சேவை வழங்குவதில் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.ஒவ்வொரு வருடமும் துறையின் தேவைக்கேற்ப தமிழ்நாடு மருத்துவப்பணிக் கழகத்தின் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் வழங்கப்படுகின்றன. அனைத்து கால்நடை நிலையங்களிலும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. மருந்துகள் தட்டுப்பாடு என்ற நிலையே ஏற்படவில்லை. தமிழகத்தில் கால்நடை நோய்களான அடைப்பான், தொண்டை அடைப்பான், கோழிக்கழிச்சல், ஆட்டம்மை போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் இராணிப்பேட்டை, கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டு அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக இலவசமாக போடப்படுகிறது. சட்டமன்றத்திற்கு வரும் எதிர்கட்சித் தலைவர் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பொய் அறிக்கை வெளியிடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடிக்கு நன்றி
சேலம் மாவட்டம், தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது தான் முடியும் தருவாயில் உள்ளன. ஆனால் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் இப்பூங்காவின் ஒரு பகுதி தன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பொய்யை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் இப்படித்தான் "பொய் திறப்பு" விழாக்கள் நடைபெற்றன என்பதை தனது அறிக்கை மூலம் எதிர்கட்சி தலைவர் தமிழக மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான உயர் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒரு இயக்குநர் பதவி தமிழக முதல்வர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு அப்பதவியை நிரப்புவதற்காக 05.11.2022 அன்று செய்திதாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதர அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நிரப்பும் பணியும் தற்போதுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் அப்பணி முடிவடைந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இப்பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

போகாத ஊருக்கு வழி
தலைவாசலில் உள்ள கால்நடை பூங்காவில் சுமார் 300 ஏக்கர் நிலம் ஒரு காலணி தயாரிக்கும் தனியார் நிறுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தோல் பதனிடும் தொழிற்சாலை கொண்டுவர அரசு முயற்சிப்பதாக ஒரு பொய் தகவலை பரப்ப முற்படுகிறார். தலைவாசல் கால்நடை பூங்காவில் மட்டுமல்லாது வேறு எந்த கால்நடை பண்ணை நிலத்தையும் விவசாயிகள், கால்நடைகள், நீர் நிலைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மாசுபடுத்தும் எந்தவொரு தொழிலுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த அரசு வழங்காது. தேவையில்லாமல் கற்பனைக் கதைகள் மூலம் மக்களை குழப்பி போகாத ஊருக்கு வழி தேடவேண்டாம் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கற்பனையில் உதித்த கதை
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரின் கற்பனையில் உதித்த பல கதைகளில் பண்ணைகளை மூடும் கதையும் ஒன்றாக கருதவேண்டியுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பண்ணைகளும் அப்பகுதிகளில் உள்ள கால்நடை வளர்ப்போரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது. இப்பண்ணைகளின் செயல்பாடுகளை எந்தவகையிலும் குறைக்கவோ, நிறுத்தவோ தமிழக முதல்வர் அவர்களின் தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சிவகங்கை, செட்டிநாடு மாவட்ட கால்நடைப்பண்ணை, திருநெல்வேலி, அபிஷேகப்பட்டி மாவட்ட கால்நடை பண்ணை ஆகியவற்றின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கும் விதமாக, குஞ்சு பொறிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க பண்ணையை மூடும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக ஒரு வதந்தியை கட்டமைத்து- அதை எதிர்கட்சித் தலைவர் அறிக்கையாகவும் விடலாமா?

புனைகதைகள் வேண்டாம்
தமிழக முதல்வர் ஸ்டாலினின் சீரிய ஆட்சியில் கால்நடைகளின் நலனை பேணி பாதுகாத்து, அதன் மூலம் கிராமப்புறங்களின் பொருளாதாரத்தின் அடிநாதமாக கால்நடை பராமரிப்புத்துறை புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. இது தவிர இன்னும் பல திட்டங்களை கால்நடை வளர்ப்போருக்காக வகுத்து செயல்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையிலான கழக ஆட்சி உறுதிபூண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொண்டு- பொய்யுரைகளும், புனைவு கதைகளும் தமிழக மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து- அதிமுகவிற்குள் நடக்கும் உள்கட்சி குழப்பத்திற்கு திரை போட்டு மறைக்க இப்படி கட்டுக்கதைகளை- கற்பனை குற்றச்சாட்டுகளை- அடிப்படை ஆதாரமின்றி "அறிக்கை" என்ற பெயரில் விட வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவருக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.