பெத்த தாயா இருந்து.. சிஎம் விஜய் கிட்ட பிச்சை கேட்கிறேன்.. திருவொற்றியூர் பிரதீப் ராஜ் தாய் கண்ணீர்
சென்னை: சென்னை திருவொற்றியூரில் நேற்று போலீஸ் நிலையம் முன்பே போலீசார் மீது குற்றச்சாட்டு வைத்து பேட்டி கொடுத்த பிரதீப் ராஜ் மறுநாளே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதீப் ராஜின் தாய், "பெத்த தாயாக இருந்து இன்னைக்கு நான் பிச்சை கேட்கிறேன். சிஎம் விஜய் சார் இதுக்கு நியாயம் கிடைக்கனும். என் புள்ளை எந்த தப்பும் பண்ணல" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பிரதீப் ராஜ் நேற்று காவல் நிலையத்தில் பேட்டி அளிக்கையில், "எனது தாய், நவநீதம் என்பவரிடம் இருந்து வட்டிக்கு பணம் வாங்கி, தனக்கு தெரிந்த நபர்களுக்கு கொடுத்தார். இந்த பணத்தை வாங்கிய சிலர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் என் தாயிடமும் என்னிடமும் பணத்தைக் கேட்டு மிரட்டினார்கள். எனவே போலீசில் புகார் அளித்தோம். ஆனால் நியாயம் கேட்க வேண்டிய காவல் நிலைய ஆய்வாளர் என்னை அழைத்து கடுமையான மிரட்டல் விடுத்தார். கை, காலை உடைச்சுடுவேன். வெட்டி திருச்செந்தூர் கடலில் கரைச்சு விடுவேன் என மிரட்டியதாக" கூறியிருந்தார்.

சிஎம் விஜய் சார்.. நியாயம் கிடைக்கனும்
உள்ளூர் ரவுடிகள், போலீசார் மீது குற்றச்சாட்டு வைத்த மறுநாளே அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது வட சென்னை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்து வட்டி பிரச்சனை தான் முதல் காரணம் என்றாலும் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள், அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் பிரதீப் ராஜீன் தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:- என் புள்ளை வந்து எந்த தப்பும் பண்ணல.. எனக்கு நியாயம் கிடைக்கனும். பெத்த தாயாக இருந்து இன்னைக்கு நான் பிச்சை கேட்கிறேன். சிஎம் விஜய் சார் இதுக்கு நியாயம் கிடைக்கனும். போன மாதம் ராதா என்ன கூப்பிட்டு வச்சு மிரட்டினாங்க.. வீடு என் பெயரில் இல்லை.. என் மாமா இந்த வீட்டில் இருந்துக்கோங்க என சொன்னார். என் புருஷன் பெயரிலும் ஒன்னும் இல்லை. என் மகன் தான் எனக்கு எல்லாம். என் புள்ளை தான் எனக்கு ஒரு தலையாக இருந்தான். மலை மாறி எனக்கு இருந்தான். அந்த தலையை தூக்கிட்டாங்க இன்னைக்கு.. அவன் வந்து நேத்து பேட்டி கொடுத்தான். இன்னைக்கு இல்லை.
இவங்க தான் காரணம்
இது இன்றைக்கு நேற்று இல்லை. இரண்டு வருஷமாக நடந்துக்குட்டு இருக்கு. துட்டு கொடுத்தாச்சு.. பத்திரத்தை திருப்பி தரவில்லை. 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தேன். ஆட்டோ புக்க வாங்கிட்டாங்க.. வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள். இதை வாங்கி வச்சுக்கிட்டு மிரட்டிக்கிட்டே இருந்தாங்க.. தினமும் மிரட்டி மிரட்டி இன்னைக்கு எனக்கு இந்த நிலைமை.
போலீஸ் ஸ்டேஷனுக்கு போனால் அங்க எங்க பேச்சு எடுக்கவில்லை. துட்டுதான் பேசுச்சு.. என் புள்ள யாருக்கிட்டயும் கடன் வாங்கியது கிடையாது. இங்க உள்ளவர்களிடம் கூட விசாரிச்சு பாருங்க.. இன்னைக்கு இப்படி ஆனதற்கு இன்ஸ்பெக்டர் நவநீதன், முத்து, கணேஷ், ராதா, சொப்பனா, நவீன், சங்கீதா தான் காரணம்.. நவீன் வந்து என் புள்ளை கழுத்தை துண்டாக வெட்டிடுவேன் என சொன்னான்.. என் புள்ளை இங்கே நல்லா பெயர் எடுத்துட்டான்.
சுட்டு போட்டுடுவேன் என சொன்னாங்க
அவங்க புள்ளை இங்கே வளர்ந்தவங்க.. ஆனால் நாங்க நேற்று இங்க வந்து இன்னைக்கு நல்ல பெயர் எடுத்துட்டோம்ன்னு கோவம். நாங்க நேற்று வளர்ந்த காளானாம்.. புடுங்கி போட்டுடுவாங்களாம். என் புள்ளை வந்து அவங்க வீட்டில உள்ளவங்களை கையை பிடிச்சி இழுத்தான் என பொய் புகார் கொடுத்து இருக்கிறார்கள். போலீசுக்கு 1.80 லட்சம், இன்ஸ்பெக்டருக்கு 50 ஆயிரம், ஸ்பெஷல் டீமுக்கு 50 ஆயிரம் என காசை கொடுத்துவிட்டு அதற்கு எங்கக் கிட்ட வட்டி கேட்டாங்க. உன்னால நாங்க ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடன் கட்டனும் என சொல்லி துட்டு கேட்டாங்க.
நீங்க கொடுத்ததுக்கு நான் ஏன் கொடுக்கனும்னு கேட்டது தான் இந்த கொலைக்கு காரணம். போலீசிடம் கம்ப்ளைண்ட் பண்ண போனதுக்கு நேற்று இன்ஸ்பெக்டரே என் புள்ளைய காலால் எட்டி உதைச்சாங்க.. ஏன் என்று கேட்டதற்கு உன்னை சுட்டு போட்டுடுவேன் என்று சொன்னார். நான் உடனே நாங்க என்ன குருவியா சார் என கேட்டேன்.. உடனே என்னை வெளியே இழுத்துவிட்டு வந்து விட்டாங்க.. திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவேன்.. துண்டு துண்டா வெட்டி விடுவேன் என இன்ஸ்பெக்டர் சொன்னார்.. எல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் ரெக்கார்டு இருக்கும்.
என் புள்ளையே போயிட்டான் இனி எனக்கு என்ன சார்.. நவீன் தான் தலையை துண்டாக வெட்டிடுவேன்னு சொன்னாங்க.. என் புள்ளை வந்து எந்த தப்பும் பண்ணல.. எனக்கு நியாயம் கிடைக்கனும். பெத்த தாயா இருந்து இன்னைக்கு நான் பிச்சை கேட்கிறேன். சிஎம் விஜய் சார் இதுக்கு நியாயம் கிடைக்கனும்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
