நான் தான் ஜெயலலிதாவின் மூத்த அண்ணன்.. ஜெ.சொத்தில் பாதி பங்கு கேட்டு கோர்ட் படியேறிய மைசூரு முதியவர்!
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளில் தனக்கு 50 சதவீதம் பங்கு வேண்டும் எனக் கோரி 83 வயது முதியவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதியை தனக்கு வழங்க வேண்டும் என்றும், தான் அவரது மூத்த சகோதரர் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மைசூருவை சேர்ந்த வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், மைசூருவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தந்தையின் முதல் மனைவியின் மகன் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா வாரிசு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இதையடுத்து ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபா, தீபக் ஆகியோரே வாரிசு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையமும் இவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா தனது சகோதரி எனக் கூறி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மூத்த அண்ணன்
வாசுதேவன் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியான ஜெயம்மாவின் ஒரே வாரிசு நான். அதன் பிறகு, வேதவள்ளியை எனது தந்தை திருமணம் செய்துக் கொண்டதன் மூலம் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்தனர். அந்த வகையில் ஜெயலலிதாவும், அவரது சகோதரர் ஜெயக்குமாரும் முறையே எனக்கு சகோதரர் மற்றும் சகோதரி என்று கூறியுள்ளார்.

ஜீவனாம்ச வழக்கு
மேலும், கடந்த 1950-ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு எனது தாய் ஜெயம்மா மைசூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஜெயலலிதா, ஜெயக்குமார் மற்றும் அவர்களது தாய் வேதவள்ளி எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர் என்றும் தனது கருத்துக்கு ஆதாரமாக வாசுதேவன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சொத்தில் சரிபாதி பங்கு
ஜெயக்குமார் இறந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஜெயலலிதாவின் சொத்துகளில் தனக்கு 50 சதவீதம் தர வேண்டும் என்றும் ஜெ.தீபா, தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வாசுதேவன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications