சட்டமன்ற தேர்தலுக்கான.. நாதக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! காரைக்குடியில் சீமான் போட்டி?
சென்னை: அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை சீமான் வெளியிட்டிருக்கிறார். அதில் இடும்பாவனம் கார்த்திக், வீரப்பன் மகள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
234 தொகுதிகளிலும் சரிபாதி அளவுக்கு பெண்களையும், ஆண்களை நிறுத்த சீமான் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி தற்போது முதற்கட்டமாக 100 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 12 பொது தொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில், வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என்றும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இயக்குநர் களஞ்சியம் மற்றும் மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, காரைக்குடியில் சீமான் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் சிவகங்கை மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. அதில் காரைக்குடி தவிர மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமானுக்கு சொந்த ஊர் காரைக்குடி தொகுதிதான். எனவே அதில் சீமான் நேரடியாக களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கி இருந்தார். அதில் 24.43% வாக்குகளை பெற்று, மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில் கட்சி ஒட்டுமொத்தமாக மாநில அளவில் 6.72% வாக்குகளை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications