சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திராவிடக் கட்சிகளின் தோல்வியால் ஜாதியின் பெயரால் தமிழகத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்– சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் தோல்வியால் ஜாதியின் பெயரில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமைகள் தொடருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறியுள்ளதாவது: புதுகோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கைவயலில் வசித்து வரும் ஆதித்தமிழ் மக்கள் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆட்படுத்தபடுத்தப்படும் செய்தியறிந்து உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு ஆதித்தமிழ் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று அவர்களின் உரிமையை மீட்டு தந்ததோடு, அதற்கு எதிராக நின்றவர்களையும், இரட்டை குவளைமுறையைக் கடைபிடித்து தீண்டாமைக் கொடுமை புரிந்தவர்களையும் உடனடியாக கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், சகோதரி கவிதா ராமு அவர்களின் துணிகரச் செயலுக்கும், அவரோடு துணை நின்ற காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் எனது பாராட்டும், வாழ்த்துகளும்.

Naam Tamilar seeman blames Dravidian Parties for Caste Oppressions

சகோதரி கவிதா ராமு அவர்களை படிக்கின்ற காலத்திலிருந்து நான் அறிவேன். தமது அறிவையும், ஆற்றலையும், அதிகாரமிக்க பதவியையும் எப்போதும் எளிய மக்களின் நல்வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் அவருடைய அர்ப்பணிப்புமிக்க உழைப்பென்பது மிகுந்த போற்றுதலுக்குரியது.

இதே போல் வேங்கைவயலில் ஆதித்தமிழ்மக்கள் பயன்படுத்திய குடிநீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தை கலந்த சமூக விரோதிகள் செயல் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். அதனை பருகிய குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. சிறிதும் மனச்சான்று இன்றி இத்தகைய வன்கொடுமைகளைப் புரிந்த சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அறுபதாண்டுகளுக்கும் மேலாக சாதியொழிப்பு, சமூகநீதி என்றுப்பேசி, திராவிடக் கட்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை ஆண்டபின்பும் சாதியின் பெயரால் நடைபெறும் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது. ஆகவே, இனியும் இதுபோன்ற சாதிய, தீண்டாமை வன்கொடுமைகள் தமிழ் மண்ணில் தொடர்வதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. அப்பகுதி குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடிநீரில் ஏதோ பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர்தான் ஜாதிவெறியர்கள், பொதுமக்களின் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்திருப்பது தெரியவந்தது. குடிநீர் தொட்டியை பல்வேறு ஜாதி மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Naam Tamilar seeman blames Dravidian Parties for Caste Oppressions

இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் தலைமையிலான குழு வேங்கைவயல் சென்று விசாரணை நடத்தியது. அப்போது ஜாதிய ஒடுக்குமுறை அங்கு தலைவிரித்தாடுவது கண்டறியப்பட்டது. உள்ளூர் கோவிலில் அனுமதி மறுப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனி குவளை என இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளூர் கோவிலுக்குள் ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே அழைத்துச் சென்றனர். மேலும் ஜாதி ஒடுக்குமுறை, குடிநீரில் மலம் கலந்தது தொடர்பாக சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

English summary
Naam Tamilar Chief seeman has blamed Dravidian Parties for Caste Oppressions in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X