உதயநிதி தலையை வெட்டுன்னு சொல்ற நீ ரவுடி.. பொறுக்கி..சாமியார்னு சொல்லாத.. சீமானுக்கு செம்ம கோபம்!
சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி வந்தால் ரூ10 கோடி பரிசு என அறிவித்த உத்தரப்பிரதேச சாமியாருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சனாதனத்தை ஒழிப்போம் என்ற பேச்சு சரியானதுதான்; என் தலையை வெட்ட வேண்டும் என உ.பி. சாமியார் விடுக்கும் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்; கருணாநிதி தலைக்கு கூட விலை வைத்தார்கள். தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கிறவர்கள் நாங்கள்.. கருணாநிதியின் பேரன் நான்.. இதற்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. இது தொடர்பாக கூறுகையில், ஒரு தலைவர் உருவாவதற்கு புறச்சூழல்கள் அமைய வேண்டும். அண்ணா மறைந்த பிறகு அன்றைக்கு ஒரு சூழல் இருந்த காரணத்தால் கருணாநிதி தலைவரானார். உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி அறிவித்து ஒரு நல்ல காரியம் செய்துள்ளனர். அதாவது உதயநிதி ஸ்டாலின் என்ற எதிர்காலத் தலைவரை இப்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து செய்திருக்கிறார்கள். அதற்காக நன்றிதான் சொல்லனும். நாம் ரூ10 கோடி அறிவித்த ஆளுக்கு இன்னொரு ரூ10 கோடி தர வேண்டும்.. அவ்வளவு பெரிய வேலையை அவர் செய்திருக்கிறார் என கூறியிருந்தார்.

இந்த பிரச்சனை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: உத்தரப்பிரதேச சாமியாரின் மிரட்டல் ஒரு வேடிக்கை. ராமர் பால பிரச்சனையின் போது இதேபோல கருணாநிதியின் தலைக்கு விலை வைத்தார்கள். அமைச்சர் உதயநிதி சொல்லும் கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் கழுத்தை அறுத்து கொண்டு வா என்றால் எப்படிப்பட்ட பேச்சு? அப்ப நீ என்ன சாமியார்? தலையை வெட்டிட்டு வா என சொல்லும் நீ ரவுடி, பொறுக்கி. நீ எப்படி சாமியாராக முடியும்? உதயநிதி கருத்து பிடிக்கவில்லை எனில் அப்படி சொல்லக் கூடாது என கருத்தால்தான் பேச வேண்டும்.
சனாதனம் என்பது ஏற்றத் தாழ்வுகளை வேறுபாடுகளை சொல்லக் கூடியது. அதெல்லாம் எப்படி சரி? நீங்கள் எல்லாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள்?. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications