முதல்வர் விஜய்க்குப் பொன்னாடைக்கு பதிலாகப் புடவையை போர்த்தினாரா நயினார்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: முதல்வர் விஜய்க்குப் பொன்னாடைக்குப் பதிலாகப் புடவையை நயினார் நாகேந்திரன் போர்த்தினாரா என்று திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அது பொன்னாடை தான் என்ற போதிலும், புடவை போல் இருப்பதாகக் கிண்டலுடன் எதிர்க்கட்சியினர் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவருக்கு எதிராகத் தவெகவினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், திமுகவை விமர்சிக்கும் அளவிற்குத் தவெக பாஜகவை விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டினை திமுகவே முன்வைத்து வருகிறது. ஏனென்றால், நயினார் நாகேந்திரன் பேசிய வார்த்தைகளுக்காக அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தவெக அரசு எடுத்ததே இல்லை; ஆனால், அதேபோன்று பேசிய திமுகவினர் மீது மட்டும் தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

இந்தச் சூழலில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்தார். அப்போது பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரை வரவேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசினார். அவருக்குப் பொன்னாடையும் அணிவித்தார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "இன்றைய தினம், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களைச் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக வருகை தந்திருந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்களை, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினோம்" என்று கூறியிருந்தார்.
இதனிடையே, நயினார் நாகேந்திரன் அணிவித்த அந்தப் பொன்னாடையை வைத்துத் தான் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். அந்தப் பொன்னாடை, அதாவது சால்வை, சேலையைப் போல் இருப்பதாக விமர்சிக்கிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "என்னங்கடா.. பிளவுஸ் பிட் எல்லாம் இருக்கு.. சால்வைன்னு சொல்லிட்டுச் சேலையை போர்த்துறீங்களா?" என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதேபோன்ற விமர்சனங்களைப் பல நெட்டிசன்கள் கிண்டலாகவும் கேலியாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
மறுபக்கம், "நயினார் நாகேந்திரன் மரியாதை செய்யும்போது, திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி கப்சிப்னு இருந்தீங்க பாருங்க சூப்பர் தம்பி" என்று அதிமுகவினரும் தங்கள் பங்கிற்குக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். உண்மையிலேயே நயினார் அணிவித்தது சால்வை தான் என்றாலும், நயினார் நாகேந்திரன் பேசிய வார்த்தைகளுக்கு இதுவரை கடுமையான பதிலடி தவெக தரப்பில் இருந்து வரவில்லை என்றும் கூறிவரும் எதிர்க்கட்சியினர், அதனைச் சேலை என்று விமர்சனம் செய்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். தவெகவினர் ஒருபக்கம் திமுகவினருக்குப் பதிலடி கொடுத்து வரும் அதே வேளையில், நயினார் நாகேந்திரனையும் நேற்று நேரடியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் கூறும்போது, "எம்.பி., எம்.எல்.ஏ. பதவியில் இல்லாத ஒருவரை அரசு நிகழ்ச்சி விழா மேடையில் அமர வைத்தது தவறு; அது ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகும். அரசு நிகழ்ச்சியில் கட்சி சார்ந்தவர்கள் இருப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக தான் காரணம் என்றும், மக்கள் சமாதானமாகத் தான் உள்ளனர் என்றும், பாஜக தான் பிரச்சினை செய்கிறது என்றும், திருப்பரங்குன்றத்தில் பாஜக உள்ளே வந்ததால் மக்களின் அமைதி போனது என்றும் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு விழாவில் பங்கேற்றதை வைத்து நயினாருக்கு எதிராகத் தவெகவினர் கடுமையான பதில்களைக் கொடுத்து வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
