திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ‛நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டம் துவங்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் நன்கொடை வழங்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டி அறிமுக செய்யப்பட்டுள்ள அற்புதமான திட்டம் 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்'. இந்தத் திட்டத்தைக் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் வழங்கினார். தமிழ்நாடு அரசின் இந்த முன்முயற்சியைப் பலரும் ஆதரித்து வருகின்றனர்.
இதன் அடுத்தகட்ட அதிரடியாக ஒரு சிறப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது. இத்திட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒருமாத ஊதிய தொகையான ரூபாய் 1.29 கோடியை அரசுக்கு அள்ளிக் கொடுத்துள்ளனர். அதற்கான காசோலையை திமுக சட்டமன்ற கொறடா கோவி. செழியனும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி உள்ளனர்.
இதன்பின் தனியே ஸ்டாலினைச் சந்தித்து சபாநாயகர் அப்பாவு தனது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளார். தனியார் உதவியுடன் தரமாக மாறப்போகின்றன தமிழ்நாடு அரசுப் பள்ளிகள். இந்த நல்ல காரியத்திற்கு முன்னுதாரணமாக முகம் காட்டி உள்ள கோவி செழியனிடம் நாம் பேசினோம்.

அரசுப் பள்ளிக்கு நிதியை அள்ளிக் கொடுத்த திமுக:
திமுகவின் சட்டமன்ற கொரோடா கோவி செழியன், "ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுக்காலம் முடங்கிக் கிடந்த பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் புத்துயிர் கொடுத்து வருகிறார். அதில் ஒரு சிறப்பான திட்டம்தான் 'நம்ம ஸ்கூல்' திட்டம். இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி, அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதியைத் தனியார் பள்ளி தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
இதற்காகக் கள ஆய்வு செய்யப்பட்டது. அதில் அரசுப் பள்ளிகளின் நிலை கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் உரிய முறையில் மேம்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. அதையொட்டியே அரசு, தன்னார்வலர்களின் நிதியைப் பெற்று அரசுப் பள்ளிக்கூடங்களின் உள் கட்டமைப்பை உயர்த்த முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய பங்களிப்பாக ரூபாய் 5 லட்சத்தை இத்திட்டத்திற்கு முன்மாதிரியாக அளித்தார்.
அவரே இதற்கு முன்னோடியாக விளக்கும் போது அதுவரை பின்பற்றி வரும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அரசின் இந்த நல்ல முயற்சிக்கு உதவ முடிவு செய்தோம். ஆகவே கொரடா ஆகிய எனது முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக அளித்துள்ளோம். இந்த விருப்பத்தை எங்களது சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்த போது அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியாக நிதியளிக்க முன்வந்தார்கள்.
தன்னார்வலர்களே அரசின் நல்ல நோக்கத்திற்கு உதவ முன்வரும்போது, சட்டமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு அதில் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தே இதைச் செய்துள்ளோம்.
மேற்கொண்டு திமுக கூட்டணியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களான கோவை ஈஸ்வரன், ஜவாஹிருல்லா ஆகியோர் இதற்கு தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை அளித்துள்ளார்கள். அந்த தொகையைத்தான், நான் முதல்வர் ஸ்டாலினிடம் சில நாட்களுக்கு முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் சென்று அளித்தேன்" என்று கூறிய செழியனிடம் இதைப்போல் கூட்டணிக் கட்சி இல்லாத சட்டமன்ற உறுப்பினரிடமும் நிதியைத் திரட்ட முன்வருவீர்களா எனக் கேட்டோம்.

அரசின் முயற்சிக்கு உதவ மனம் வராத அதிமுக:
அதற்கு, அவர், "எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து நிதியை அளித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இதுவே அதிமுக ஆட்சிக்காலத்தில் புயல் நிவாரணம் போன்ற சம்பவங்களுக்கு நிதி திரட்டிய போது இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தானாக முன்வந்து நிதி அளித்துள்ளார். நேரடியாக ஜெயலலிதாவைச் சந்தித்து நிதி வழங்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அப்படி அதிமுகவினர் செய்திருக்க வேண்டும்.
கேட்பது ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா எனப் பாரபட்சம் பாராமல் உதவிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். செய்தித்தாள்களில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தாங்களே முன்வந்து அதிமுகவினர் வழங்கி இருக்கவேண்டும். திமுக அப்படித்தான் செய்தது" என்கிறார் கோவி செழியன்.
இத்திட்டத்தின் அடிப்படையை உணர்ந்து நீங்கள் உங்கள் தொகுதி பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா? என்ற கேள்விக்கு, "எனது தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அதில் ஆரலூர், கதிராமங்கலம், அணைக்கரை ஆகிய மூன்று பள்ளிகளின் நிலை சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே மூன்று பள்ளிகளைச் சீர் செய்ய முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கித் தந்துள்ளார்.
மேலும் சிட்டி யூனியன் பேங்க் மற்றும் கும்பகோணம் பரஸ்பர வங்கி ஆகியவற்றிலிருந்தும் கூடுதலாக உதவி பெறப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு வகுப்பறை, கழிப்பறை மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தித் தர உள்ளோம்.
மேலும் பெறப்பட்டுள்ள நிதியைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும் திட்டம் வகுத்து வருகிறோம். முதல்வர் ஸ்டாலின் சொன்னதைப் போல், 'அரசுப் பள்ளியை பரிசுப் பெறும் பள்ளியாக மாற்றிக்காட்டுவதே எங்களின் எதிர்கால இலக்கு" என்று மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறார்.

தமிழ்நாடு அரசு 7500 கோடி ரூபாய் மதிப்பீட்டில்:
"உங்களுடைய வாழ்கையில் மறக்க முடியாத காலம் எது என யாரைக் கேட்டாலும், 'அது என்னுடைய பள்ளிக் காலம்தான்' என்றே பலரும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். பள்ளியில் துள்ளித்திரிந்த காலத்தை யாராலும் மறக்க முடியாது.
நேற்று பார்த்தவரைக் கூட மறந்துவிடுவோம். ஆனால், பள்ளியில் நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியரின் பெயரை யாரும் மறந்திருக்க மாட்டோம். பள்ளிப் பருவத்தில் படித்தவர்களைத்தான் நம்முடைய வாழ்நாளில் மறக்க முடியாத நண்பர்களாக இருப்பார்கள். பள்ளிக் காலம் என்பதுதான் வாழ்வின் வசந்தகாலம்.
நாம் இந்தளவுக்கு வாழ்க்கையில் உயர்வதற்கு இந்தப் பள்ளிகள்தான் காரணம். அப்படி உறுதுணையாக இருந்த பள்ளிக்கு நாம் உதவவேண்டாமா? அதற்கான உன்னதமான திட்டம்தான் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்'. எல்லா வசதிகளையும் அரசாங்கமே செய்து தரமுடியாது. பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். பயன்பெற்றவர்கள் தங்களின் நன்றியைச் செலுத்தலாம். அதற்கான அடையாளமாக 'நம்ம ஸ்கூல்' திட்டம் செயல்படும்" என்று செண்டிமெண்ட் ஆக 'நம்ம ஸ்கூல்' தொடக்க விழாவில் பேசி இருந்தார்.
அதன் ஒரு பகுதியாக 7500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது இந்த அரசு.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தாண்டி இந்தத் திட்டத்திற்குத் தனது சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தை வழங்கி உள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவரிடம் பேசினோம். அவர், "இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளுக்குச் சரியான கட்டிட வசதி இல்லாத நிலைமைதான் இருக்கிறது. காலம் மாறிவிட்டது என்கிறோம். எவ்வளவோ நவீனமாக மாறிவிட்டோம் என்கிறோம்.

50 அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்த ஈஸ்வரன்:
ஆனால் அரசுப் பள்ளிகளின் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறோம் என்பதே உண்மையாக உள்ளது. இன்னும் வேதனை என்னவென்றால் பல பள்ளிகள் கட்டிட வசதியே இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்துக் கொண்டிருக்கின்றன.
எனது தொகுதியில் உள்ள 50 பள்ளிகளுக்குச் சென்று நேரடியாகச் சேதனை நடத்தினேன். அப்போது 40 பள்ளிகள் நான் முன்பே சொன்ன மாதிரி எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல்தான் இருந்தன. இந்த மாதிரியான பள்ளிகளில் எப்படி மாணவர்கள் சேருவார்கள்? அதற்கான தீர்வு உடனடியாக வேண்டும். அரசும் அதனை மாற்றுவதற்காகப் பேராசிரியர் பெயரில் நிதி ஒதுக்கிப் பல கட்டடங்களைக் கட்ட முன்வந்துள்ளது. ஆனால் அந்த நிதி மட்டுமே போதாது. ஏனெனில் தேவை மிக அதிகமாக இருக்கின்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குறிப்பிட்ட அளவுக்குத் தொகையை ஒதுக்கி, அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகிறோம். ஆனால் அதுவும் போதவில்லை. உடனடியாக பெரிய அளவில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவில்லை என்றால், நிலைமை இன்னும் 20 ஆண்டுகளில் மோசமாகிவிடும். அதற்கு இப்போது உள்ள கட்டிடங்களும் மிகப் பழமையாகிவிடும். உடனடியாக ஒரு நிரந்தர தீர்வு முக்கியம். ஆகவேதான் முதல்வர் ஸ்டாலின் இந்த 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்தை முன்வைத்து ஒரு சிறப்பான முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஒரு காலத்தில் படித்தவர்கள் இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நாம் படித்த பள்ளி நன்றாக இருக்கவேண்டும் என அவர்கள் உணர்வுப்பூர்வமாக நினைக்கிறார்கள். உதவவும் நினைக்கிறார்கள். முறைப்படுத்தப்படாத வகையில் பலர் முன்பே இந்தச் சேவையைச் செய்து வருகிறார்கள். அதை இப்போது ஒரு முறைப்படுத்திக் கொடுத்துள்ளது. தனிப்பட்ட வகையில் செய்தவர்கள், இனி அரசுடன் கைகோர்க்க முடியும்.
சில தனியார் நிறுவனங்கள்கூட அரசின் இந்தத் திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளனர். அப்படி அவர்கள் வழங்கும் உதவியைக் குறிப்பிட்ட இந்தப் பள்ளிக்குத்தான் செய்து தரவேண்டும் என முறையிட முடியும். அதற்கான வசதி இத்திட்டத்தில் உள்ளது.

ஈஸ்வரன் அரசுக்கு வைத்த கோரிக்கை:
மேலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என நான் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். 'நமக்கு நாமே' என்று ஒரு திட்டம் முன்பே உள்ளது. அந்த நிதியில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் வாழும் , கட்டிடம், சாலை வசதி அல்லது அடிப்படை வசதிகள் தேவை என்றால் அதற்கான தொகையில் மக்கள் 20% செலவழித்தால் போதும், மீதமுள்ள 80% அரசு செலவு செய்யும். பொது பகுதியினர் பகுதி என்றால் 33% கட்ட வேண்டும். மீதியை அரசு செலவு செய்து தரும்.
இத்திட்டத்தில் கொஞ்சம் சலுகை அறிவிக்க வேண்டும் என முறையிட்டுள்ளேன். பள்ளிக் கட்டிடம் கட்டினால் 20% என்பதைக் குறைத்து 10% ஆகக் குறைக்கக் கேட்டுள்ளேன். அல்லது 20% என்பது அனைவருக்கும் என மாற்றி வழங்குங்கள் எனக் கூறியுள்ளேன். அதன் மூலம் அதிக நபர்கள் முன்வருவார்கள். பள்ளிகள் விரைவாக மேம்படும். பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் 10 ஆண்டுகளுக்குள் தன்நிறைவு பெற்றுவிடும்.
ஆக, 'நம்ம ஸ்கூல்' நல்ல திட்டம். அதை அறிமுகப்படுத்தியதற்காக நான் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறுகிறேன்" என்கிறார்.

வார்த்தையை வைத்து அரசியல் செய்வதா?:
இவரிடம் 'நம்ம ஸ்கூல்' என்பதில் 'ஸ்கூல்' என்பது ஆங்கிலத்தில் உள்ளது எனச் சிலர் சொல்லும் விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றோம். "என்னைப் பொறுத்தவரை நான் ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பவன். எதையும் நேர்மறையாக அணுக வேண்டும்.
'ஸ்கூல்' என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்தால் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படாமல் போய்விடுமா என்ன? இந்த வீண் விவாதம் தேவையற்றது. இத்தனை ஆண்டுகள் பாழாய் கிடந்த பள்ளியை மேம்படுத்த ஸ்டாலின் முயற்சி எடுக்கிறார். அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். வார்த்தையை வைத்து அரசியல் பண்ணக் கூடாது" என்கிறார்.












Click it and Unblock the Notifications