திருப்பரங்குன்றம் விவகாரம்.. விஜய் பேசாமல் இருப்பதே நல்லது.. நாஞ்சில் சம்பத் கொடுத்த ஷாக் பதில்!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் பேசாமல் இருப்பதே நல்லது என்று அக்கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இணக்கமாக உள்ளீர்களா என்று விஜய்யிடம் கேட்டதாக கூறிய அவர், அதனை விஜய் மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிவிட வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தீவிரமாக உள்ளனர். இதற்கு திமுக கூட்டணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் கூட திமுக எம்பிக்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் அத்தனை கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டனர். ஆனால் திமுக மட்டுமே போட்டி என்று கூறி வரும் தவெக மட்டுமே அமைதி காத்து வருகிறது. எப்படி நெல்லை கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் அமைதி காத்தாரோ, அதேபோல் மீண்டும் 2 நாட்களுக்கும் மேலாக அமைதியாக இருக்கிறார்.
இந்த நிலையில் தவெகவில் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் இணைந்தார். இதன்பின் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் இதுவரை பேசவில்லையே.. அதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நாஞ்சில் சம்பத், திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக ஏன் பேசவில்லை என்று விஜய்யிடம் கேட்கவில்லை.
ஆனால் விஜய் பேசாமல் இருப்பதே ஒரு வகையில் நல்லது. ஏனென்றால் திருப்பரங்குன்றம் சம்பவத்தை வைத்து குன்றம் எங்களுக்கு, குமரன் எங்களுக்கு என்று சொல்லுபவர்கள், கலவர அரசியலுக்கு கை கால் முளைக்க வைக்க முடியுமா என்று யோசிக்கிறார்கள். அதனால் விஜய் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, ஒரு தரப்புக்கு எதிராகவோ கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது.
கொள்கை எதிரி பாஜக என்று சொல்லிவிட்டார். பாஜகவுடன் இணக்கமான போக்கு இருப்பதாக சொல்கிறார்களே என்று கேட்டேன். அதற்கு அதிகாரத்தில் இருக்கும் கட்சியை விமர்சிக்கிறேன். தேர்தல் இங்க நடக்கப் போகிறது. அதனால் கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜக விமர்சிக்க நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications