ரூ.20 ஆயிரம் கமிஷன்? வங்கியில் கூச்சல் போட்டு கலாட்டா! நரிக்குறவ பெண் அஸ்வினி மீது மீண்டும் சர்ச்சை
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் நரிக்குறவ இன பெண் அஸ்வினி வங்கியில் சத்தம்போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. ஏற்கெனவே தனக்கு அறிவிக்கப்பட்ட கடன் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறி அஸ்வினி வீடியோ வெளியிட்டிருந்தது பரபரப்பை எற்படுத்தியிருந்த நிலையில் இந்த வீடியோவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் வங்கி தரப்பில் அஸ்வினி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அஸ்வினி இதனை மறுத்துள்ளார்.

கமிஷன்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வங்கி ஒன்றில் கூச்சலிட்டு கலாட்டாவில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் பேரில் இந்த வங்கியின் சார்பில், பூஞ்சேரியில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனாக வழங்கப்பட்டது. இந்த கடனை அஸ்வினி வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் 4 பேரிடமிருந்து அஸ்வினி ரூ.20 ஆயிரம் கமிஷனாக பெற்றதாக வங்கி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

சர்ச்சை
இதை கேட்டு ஆத்திரமடைந்த அஸ்வினி வங்கியில் கூச்சலிட்டு கலாட்டாவில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அஸ்வினியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கெனவே அஸ்வினி மீது ஏராளமான புகார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரு டிபன் கடையில், உணவு பொருட்களை குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் என்று சர்ச்சையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

புகார்
அதேபோல, பேக்கரி, உணவகம், மருந்துக்கடை என பல இடங்களில் இதுபோன்ற சர்ச்சையில் அஸ்வினி ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சில கடைகளில் உணவு தரமாக இல்லாத காரணத்தினால் கடையை காலி செய்துவிடுவேன் என்றும், முதலமைச்சர் எனக்கு நன்கு தெரிந்தவர் என்றும் அதேபோல, நான் புகார் அளித்தால் உடனே அதிகாரிகள் வந்துவிடுவார்கள் என்றும் மிரட்டுவதாக அஸ்வினி மீது சில கடைக்காரர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

விளக்கம்
ஆனால் இது குறித்து அஸ்வினி விளக்கமளித்துள்ளார். என் மீது பொய் புகார் கூறுகிறார்கள். எங்களிடம் தீண்டாமை பார்க்கிறார்கள். அதை திசை திருப்ப என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஹோட்டல்களில் சாப்பிட சென்றால் மற்றவர்களுக்கு சில்வர் தட்டில் இலை வைத்து தருகிறார்கள். எங்கள் இனத்தினர் சென்றால் பிளாஸ்டிக் தட்டில் இலை வைத்து தருகிறார்கள். மேலும் மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு அப்படியே தட்டை வைத்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் சாப்பிட்ட பிறகு அந்த இலையை குப்பையில் போட்டு தட்டை கழுவி கொடுக்க சொல்கிறார்கள். இதை நான் தட்டி கேட்டேன். அதற்கு முதலமைச்சர் உன் வீட்டில் வந்து சாப்பிட்டிருந்தாலும் நாங்கள் உங்களை ஒதுக்கிதான் வைப்போம் என்கிறார்கள் என்றார் அஸ்வினி.

ஏன் கவனம்?
இதுபோன்ற சில பிரச்னைகளை எல்லா சமூகத்தினரும்தான் செய்கிறார்கள். ஆனால் அஸ்வினி மீது மட்டும் ஏன் கவனம் குவிக்கப்படுகிறது? அவர்கள் செய்யும் சில சில தவறுகள் மட்டும் ஏன் பெரிதுபடுத்தப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். எழுத்தாளர் ஜெயகாந்தன் வரிகளில் சொல்வதெனில் "வளைந்தே பழக்கப்பட்ட ஒரு சமூகத்தில் சராசரியாக நேராய் நடப்பவர்களே, திமிர் பிடித்தவர்களாக தெரிகிறார்கள்" என்றும் கூட சொல்லலாம்.












Click it and Unblock the Notifications