Exclusive: குமுறும் மாணவிகள்.. திண்டுக்கல் நர்சிங் கல்லூரி பாலியல் சீண்டல் பற்றி பகீர் தகவல்கள்
சென்னை: திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனாம்பட்டி பகுதியில் உள்ள சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மீது அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில் 5 தனிப்படையினர் பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற காவலுக்குப் பிறகு அவரிடம் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

20 மாணவிகள்
இதற்கிடையே தாளாளர் ஜோதி முருகன் மீது பாலியல் புகார் கூறிய மாணவிகள், சிலரிடம் பேசியபோது பல தகவல்கள் கிடைத்தன. 8 பேர் மட்டும் அமரக்கூடிய ஜோதிமுருகனின் சொகுசு காரில் 20 மாணவிகளை ஏற்றிக்கொண்டு நள்ளிரவில் வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

தாளாளரிடம் போட்டோ
மேலும், கல்லூரி விடுதி காப்பாளரான அர்ச்சனா, தாளாளரிடம் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள் என மாணவிகளை வற்புறுத்தியுள்ளதாகவும், அவர் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொள்வார் எனக் கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

சாலை மறியல்
மாணவிகளுக்கு உணவுப் பொருள்கள், ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து நடனமாட வைத்து, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும் தற்போது வெளிவந்துள்ளது. இதனால் வெறுப்படைந்த ஒரு மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவிகளிடம் தெரிவிக்க, அவர்களும் தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து கல்லூரியில் தனியாக சிக்கிய ஜோதியை சட்டையைப் பிடித்து அடித்து துவம்சம் செய்த மாணவர்கள், அடுத்ததாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் புள்ளிகள்
கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஜோதிமுருகனுக்கு, மட்டும் தொடர்பில்லை எனவும், வேறு முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் புதிய கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் பீதியில் உறைந்துள்ளனர். ஜோதிமுருகன் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே நடந்த உண்மை வெளியே தெரியவரும் என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் மீண்டும் பூதாகரமாக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications