நம்பிக்கையில்லா தீர்மானம்.. விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த விஷப் பரிட்சை! கவிழுமா தவெக ஆட்சி? அலசல்
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் சட்டசபையில் நடந்த முதல் விஷப்பரிட்சையான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதல்வராக தொடர்கிறார். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவடைந்து 6 மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் அடுத்ததாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர திரை மறைவில் வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோறுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என கம்யூனிஸ்ட் தோழர் வீரபாண்டியன் சொல்லி இருக்கும் நிலையில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் கொண்டு வந்தால் தற்போதைய சூழலில் விஜய்க்கு சாதகமாக பாதகமாக என்பது குறித்து பார்க்கலாம்..

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பெரிய அளவில் கூட்டணி அமைத்தும் கை கொடுக்காத நிலையில் தனித்துப் போட்டியிட்டு ஒரு கட்சி 108 தொகுதிகளில் வெல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
இருந்தபோதும் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதை அடுத்து முதல்வராக விஜய் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபித்தது. அதே நேரத்தில் அதிர்ச்சி தரும் விதமாக அதிமுகவினர் சுமார் 25 பேர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். காலச் சூழல்கள் மாறி இருக்கும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து ஆறு மாதம் கடந்திருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர முடியும்.
இதற்கிடையே கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் மீது அதிருப்தியில் இருக்கின்றன. குறிப்பாக சட்டம் ஒழுங்கு, பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி போராட்டத்தில் குதித்துள்ளனர் தோழர்கள். கம்யூனிஸ்டுகள் தயவு காரணமாகத் தான் ஆட்சி நடக்கிறது என பேசி வருகின்றனர் தோழர்கள்.
இதற்கிடையே அதிமுகவும் திமுகவும் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாக பகீர் புகாரினை முன் வைத்திருக்கிறார் மதுரை எம்எல்ஏவான முஸ்தபா. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வீரபாண்டியன், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும் என தெரிவித்திருக்கிறார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளது.
இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து, கம்யூனிஸ்டுகள் ஆதரவை வாபஸ் பெற்றால் விஜய் ஆட்சி கவிழுமா என்ற பேச்சு ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் சட்டமன்ற எம்எல்ஏக்கள் கணக்கை வைத்து பார்த்தால் விஜய்க்கு சாதகமா? பாதகமா? என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதில் முதல்வர் விஜய் பெரம்பலூர் பெரம்பலூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா சத்தியபாமா உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அப்போதைக்கு சட்டமன்ற எம்எல்ஏக்கள் பலம் 227 ஆக இருந்தது.
தற்போது தாராபுரம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வென்றிருக்கும் நிலையில் அவையில் 229 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். எனவே ஆட்சியை உறுதி செய்வதற்கு மொத்தம் 114 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது தமிழக வெற்றி கழகத்தில் 109 எம்எல்ஏக்கள் இருக்கின்றன.
காங்கிரஸ் 5, விசிக 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, காமராஜ் 1, கம்யூனிஸ்டுகள் 4 என சேர்த்து மொத்தம் 123 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இதில் கம்யூனிஸ்டுகள் 4 எம்எல்ஏக்களின் ஆதரவை வாபஸ் பெற்றால் 119 என என தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறையும். அதே நேரத்தில் 115 என்ற எண்ணிக்கையை விட 4 எம்எல்ஏக்கள் அதிகமாகவே தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவு தயாராக இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் சட்டசபையில் வாக்கு எண்ணிக்கை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது அவையில் இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து தான் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு வேலை பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தால் அதுவும் விஜய் அரசுக்கு ஆதரவாக தான் இருக்கும்.
ஒருவேளை திமுகவின் 59 எம்எல்ஏக்கள் அதிமுகவின் 41 எம்எல்ஏக்கள் சேர்த்து 100 எம்எல்ஏக்களும் பாஜக 1, தேமுதிக 1 , கம்யூனிஸ்ட் 4, பாமக 4 ஆகிய எதிர்க் கட்சிகள் எம்எல்ஏக்களைச் சேர்த்து பார்த்தாலே 110 எம்எல்ஏக்கள் தான் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக இருப்பார்கள். தமிழகத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் எப்படி பார்த்தாலும் இப்போதைக்கு விஜய் ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தான் உண்மை..




Click it and Unblock the Notifications
