ராஜகுரு.. "அவருக்கே" அட்வைஸ் தருவேன்.. ஒரே வார்த்தையில் சீண்டிய சசிகலா.. அஸ்திரத்தை எடுத்த அதிமுக?
சென்னை: அதிமுகவில் எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை கூறியதாக சசிகலா கூறியது அதிமுகவினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா பேச்சால் அதிமுக தரப்பில் பல முக்கிய தலைகள் கொதித்து போய் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்த சசிகலா தற்போது அதிமுகவை கட்டுப்படுத்த போவதாக களமிறங்கி உள்ளார். தினமும் அதிமுக, அமமுகவின் தொண்டர்களிடம் போனில் பேசி ஆடியோ வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வருடத்தில் வெளியான ஆடியோ ரிலீஸ்களை விட சசிகலா கடந்த ஒரு மாதத்தில் அதிக ஆடியோக்களை ரிலீஸ் செய்துவிட்டார். 100க்கும் மேற்பட்ட ஆடியோக்களை ரிலீஸ் செய்தும் கூட இன்னும் பெரிதாக சசிகலா எந்த பாதிப்பையும் அதிமுகவில் எடுக்கவில்லை.

அதிமுக
இத்தனை நாட்கள் போனில் பேசிய போதெல்லாம், நான் ஜெயலலிதாவின் தோழி. அவருடன் இருந்தவர். அவரின் அரசியல் வாரிசு. அம்மாவின் கட்சியை காப்பாற்றுவேன். கட்சியை மீட்டு எடுத்து, ஆட்சியை மீட்டு எடுத்து அம்மாவின் ஆட்சியை நடத்துவேன் என்று சசிகலா குறிப்பிட்டு இருந்தார். எல்லா ஆடியோவிலும் குறைந்தது ஒரு முறையாவது அம்மாவை போலவே கட்சியை வழி நடத்துவேன் என்று சசிகலா குறிப்பிட்டு விடுவார்.

சசிகலா
இப்படி ஜெயலலிதா குறித்து பேசி வந்த சசிகலா சமீபமாக இரண்டு ஆடியோக்களில் எம்ஜிஆர் குறித்தும் பேசி வருகிறார். எம்ஜிஆருடன் அரசியல் ரீதியாக நான் நட்பில் இருந்தேன். அவருக்கு அரசியல் ரீதியாக ஆலோசனைகளை வழங்கினேன். அவருக்கு அரசியல் தொடர்பாக நிறைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறேன்.

கட்சி
கட்சி குறித்து அவரே என்னிடம் கேட்டு இருக்கிறார். அவரின் அரசியல் பயணத்தில் நானும் உடன் இருந்திருக்கிறேன். கட்சி எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும், தலைவர்கள் இடையே மோதல் இருக்க கூடாது என்று அவர் பல முறை குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் அரசியல் பயணத்தில் நான் இருந்தது பலருக்கும் தெரியாது என்று சசிகலா போன் கால் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டு ஆடியோ
எம்ஜிஆர் குறித்து சசிகலா இப்படி பேசும் இரண்டு ஆடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிமுகவினர் இடையில் இந்த ஆடியோ கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் ஜெயலலிதா பற்றி பேசினார், அதில் உண்மையும் இருந்தது. ஆனால் இப்போது எம்ஜிஆருக்கே தான்தான் ராஜ குரு என்பது போல பேசுகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிமுகவினர் சிலர் கொதிப்பில் இருக்கிறார்கள்.

தொண்டர்கள்
நீங்கள் கட்சியை மீளுங்கள், கட்சி தலைமைக்கு மோதல் செய்யுங்கள்.. அதற்கு ஏன் எம்ஜிஆரை இழுக்க வேண்டும் என்று அடிமட்ட தொண்டர்கள் பலர் கொதிப்பில் இருக்கிறார்கள். அதிமுகவில் தற்போது சசிகலாவிற்கு கொஞ்சம் ஆதரவாக இருப்பதே அடிமட்ட தொண்டர்கள்தான். அவர்களை கவரும் வகையில் எம்ஜிஆர் குறித்து சசிகலா பேசினார். ஆனால் அது தற்போது சசிகலாவிற்கே எதிராக திரும்பியதாக பேசிக்கொள்கிறார்கள்.

தீவிரம்
அதிலும் அதிமுகவில் ஜெயக்குமார் தொடங்கி பல மூத்த நிர்வாகிகள் எம்ஜிஆர் என்ற ஒரு பிம்பத்திற்காக அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வருகிறார்கள். அவர்களை சசிகலாவின் பேச்சு கொஞ்சம் ஓவராக சீண்டி உள்ளது என்கிறார்கள். எம்ஜிஆரின் அரசியல் லெகசிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சசிகலா பேசி உள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுகவினரும் மிக தீவிரமாக எம்ஜிஆர் ரசிகர்கள்.

எம்ஜிஆர்
சசிகலாவின் பேச்சு கொஞ்சம் லேசாக அமமுகவையும் ஜெர்க் அடைய வைத்து உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள். எம்ஜிஆர் பற்றி பேசுவதை சசிகலா கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் என்று அமமுக தரப்பிலும் கருதுகிறார்களாம். இந்த நிலையில்தான் சசிகலாவின் இதுபோன்ற ஆடியோக்களை தடுக்கும் விதமாக அதிமுக முக்கிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுக்க உள்ளது.

அஸ்திரம்
சசிகலாவிற்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் அதிமுக மாவட்ட செயலாளர்களை வைத்து வழக்கு போடும் முடிவில் உள்ளனர். ஏற்கனவே சிவி சண்முகம் சார்பாக சசிகலா மீது வழக்கு போடப்பட்டுவிட்டது. இதேபோல் சசிகலாவிற்கு எதிராக வழக்கு தொடுத்து அவருக்கு நெருக்கடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளனர். மோதலை ஏற்படுத்துகிறார், கொலை மிரட்டல், மிரட்டல் என்று பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கும் முடிவில் உள்ளனராம்.

குறைவு
அதோடு அதிமுக கொடியை அவர் வரும் காலங்களில் பயன்படுத்தாத வண்ணம் முக்கிய வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. சசிகலாவை தொடர்ந்து பேசுகிறார், இது சரிப்பட்டு வராது என்று அதிமுக கருதுகிறது.இதனால் வழக்குகள் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுக்க கட்சி மேலிடம் கருதுவதாக தகவல்கள் வந்துள்ளன.












Click it and Unblock the Notifications