எல்லாமே 'கணக்கு' தான்.. 2 பேர் மட்டும் இல்ல.. முட்டி போதும் ‘தலை’கள்.. பச்சைக்கொடி காட்டுமா பாஜக?
சென்னை : நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருமே காய்நகர்த்தி வரும் நிலையில் இன்னும் சில கூடுதல் தகவல்களும் பாஜக வட்டாரத்தில் உலவி வருகின்றன.
பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வரும் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஜான் பாண்டியன் போன்றோரும் பிரதமர் மோடியை சந்திக்க பாஜகவிடம் மனு கொடுத்துள்ளனராம்.
2024 லோக்சபா தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில், தங்களுக்கான சீட்களை உறுதி செய்யும் திட்டத்துடனே, கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பாஜகவை மொய்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுவரை யாருக்கும் அப்பாயின்மெண்ட் வழங்கப்படாத நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க அல்லது வழியனுப்பவாவது அழைக்கப்படுவோம் என அவர்கள் நம்பிக்கையில் இருந்து வருகிறார்களாம்.

அதிமுக விவகாரம்
அதிமுகவில் கடந்த ஜூன் மாதல் முதல் பல்வேறு குழப்பங்களும், மோதலும் அரங்கேறி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு அணி என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை பெற்ற எடப்பாடிபழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்தே நீக்கினார். ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையீடு செய்து, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவை பிறப்பித்தாலும், தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியாக இருக்கும் என்பதால், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும், தங்களுக்குச் சாதகமான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

பாஜகவின் கை
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், டெல்லி பாஜக மேலிடத்தின் ஆதரவைப் பெற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே முட்டி மோதி வருகின்றனர். எனினும், பாஜக, இந்த விஷயத்தில் யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது. அதேசமயம் பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஓபிஎஸ்ஸுடன் இணக்கமாக இருந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்தியுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இந்த பரபரப்பான சூழலில், காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நாளை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

பாஜக ஏற்பாடு
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கின்றனர். காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மேற்பார்வையில் பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் திட்டம்
இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சந்திக்க முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர். தற்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும்போது வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமியும்
ஓபிஎஸ் மட்டுமல்லாது, எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியை வரவேற்பதற்கும், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கும் நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒபிஎஸ் மட்டும் பிரதமர் மோடியைச் சந்தித்தால், அது தனக்கு பின்னடைவாக கருதப்படும் என்பதால், எடப்பாடியும் பாஜக தரப்பில் பிரதமரை சந்திக்க மூவ் செய்து வருகிறாராம். அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தயவை எதிர்பார்த்து இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருக்க, இன்னொரு தகவலும் பரவி வருகிறது.

2 பேர் மட்டும் அல்ல
பாஜகவுடன் இணக்கமாக இருந்து வரும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாதன் என பலரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜக தரப்பில் இருந்து யாருக்குமே இதுவரை பதில் அளிக்கப்படவில்லையாம். எனினும் எந்த நேரத்திலும் தங்களுக்கு பாஜகவின் பச்சைக்கொடி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனராம்.

பச்சைக்கொடி
பிரதமர் மோடி வருகையின்போது தமிழ்நாட்டில் வெகுவான ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்ள பாஜகவும் விரும்புகிறது என்பதால், பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட அனைவருக்கும், பிரதமரை வரவேற்கச் செல்வதற்கு அல்லது விமான நிலையத்தில் அல்லது வழியனுப்பச் செல்வதற்கு பாஜக அனுமதி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. பாஜகவின் தேர்தல் கணக்குகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளும் அதைநோக்கிய காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருகின்றன.

எல்லாமே கணக்குதான்
ஒருவேளை, இந்த முறை பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கப்படாவிட்டாலும் கூட, தாங்கள் பிரதமரை சந்திக்க விரும்பியது பாஜக தலைமைக்கு தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் 2024 தேர்தலில் நமக்கு பாஜக முன்னுரிமை வழங்கும் என்ற அரசியல் கணக்கோடு தான் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம், பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது தொடங்கி, 1 சீட் கட்சிகளின் நடவடிக்கைகள் வரை எல்லாமே அரசியல் கணக்கு தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications