500 கார்களாம்.. ‘ஒன் மேன்’ ஓபிஎஸ்! பசும்பொன் புழுதி பறக்க.. லிஸ்ட் எடுத்த டீம்.. 2 தலைகள் ஆப்சென்ட்!
சென்னை : திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே நாளை தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்லாத நிலையில், ஒன் மேன் ஆர்மியாக 500 கார்களுடன் புழுதிபறக்கச் சென்று மாஸ் காட்ட இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
ஆண்டுதோறும் அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழாகமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் காரணமாக அந்தப் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தேவர் குருபூஜை விழாவில் தங்களது செல்வாக்கைக் காட்ட ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக தயாராகி வருகிறது.
அதிமுகவில் நிலவி வரும் மோதலுக்கு மத்தியில், தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளை ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டுள்ளனராம்.

தேவர் குருபூஜை
அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட தங்கக் கவசம், ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் காரணமாக இந்த முறை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தனது பொறுப்பில் மேற்கொண்ட தங்கக் கவசம் ஒப்படைக்கும் பணி இந்தாண்டு அவரது கையை விட்டுப் போயுள்ளது. எனினும், முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் தங்களது செல்வாக்கு குறையாத வகையில் தேவர் குருபூஜையின்போது கெத்து காட்ட ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு வருகிறது.

ஈபிஎஸ் பின்வாங்கல்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்றும் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்விற்கு செல்லவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

ஸ்டாலின் ஆப்சென்ட்
அதேபோல, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்லவிருந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. முதுகுவலி காரணமாக முதல்வர் ஸ்டாலின் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், பசும்பொன் செல்லும் திட்டத்தை ரத்து செய்துள்ளார் ஸ்டாலின். அவருக்கு பதிலாக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளனர்.

டிடிவி தினகரன், சசிகலா
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திற்கு நாளை காலை 10 மணி அளவில் சென்று மரியாதை செலுத்த உள்ளார். அதேபோல, சசிகலா நாளை மதியம் 2 மணியளவில் பசும்பொன்னிற்குச் சென்று தேவர் குருபூஜையில் பங்கேற்று மரியாதை செலுத்த இருக்கிறார். இருவருமே ஆதரவாளர்கள், தொண்டர்கள் பட்டாளத்துடன் சென்று பசும்பொன்னில் மாஸ் காட்ட திட்டமிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் திட்டம்
தினகரன், சசிகலா இருவருக்கும் இடையே காலை 11.30 மணியளவில் தேவர் நினைவிடம் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் எம்.பிக்கள் ரவீந்திரநாத், ஆர்.தர்மர், எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்டோரும் செல்லவிருக்கின்றனர்.

பலத்தைக் காட்ட
தேவர் குருபூஜை நிகழ்வு, தனது அரசியல் பலத்தைக் காட்டுவதற்கான வாய்ப்பு என்பதால், அதனை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள ஓபிஎஸ் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை தன் பக்கம் திருப்ப, ஆர்பி உதயகுமாரை முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கைகளை உடைத்து, முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு தனக்குத்தான் என நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் ஓபிஎஸ்.

ஏற்பாடுகள் தயார்
நேற்று ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் ஆர்பி உதயகுமார் பசும்பொன் சென்றபோது, எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷம் எழுப்பியதால், அங்கிருந்தவர்கள் கொந்தளித்து ஆர்பி உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சம்பவமும் ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. இந்நிலையில் பல்வேறு ஏற்பாடுகளுடன் ஓபிஎஸ் அணி, நாளை பசும்பொன் செல்லத் தயாராகி வருகிறது.

500 கார்களில்
சுமார் 500 கார்களில் நாளை பசும்பொன் கிராமத்திற்குச் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம். தேவர் குருபூஜையையொட்டி, பசும்பொன்னுக்குள் வாடகை கார்களுக்கு அனுமதி இல்லாததால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் படையெடுக்க உள்ளனர். கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கார்களில் ஆட்கள் வர இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்து ஒருங்கிணைத்துள்ளனர். அதன்படி, சுமார் 500 கார்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பசும்பொன்னில் இறங்கி புழுதியைக் கிளப்பப் போகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications