சசிகலாவை சேர்க்கணும்? உயர்மட்ட குழுவில்.. ‘இக்கு’ வைத்து பேசிய பன்னீர்.. ரைட்டு, எடப்பாடிக்கு செக்?
சென்னை : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கால தலைவர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், 'சற்று விலகி இருப்பவர்கள்' என அனைவரையும் உள்ளடக்கிய 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் தீயாகக் கிளம்பியுள்ள நிலையில், இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
அப்போது, கட்சியில் இருந்து 'சற்று விலகி இருப்பவர்கள்' ஆகியோரையும்14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் நிலையில் அது பற்றி ஆலோசிப்பதற்காக சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்ற சர்ச்சை எழுந்தது.

ஒற்றைத் தலைமை
இதையடுத்து ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமியே அப்பதவியில் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனித்தனியாக ஆலோசனை
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவு தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். நேற்றும், இன்றும் கூட இருவரும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதிமுகவின் இரு தலைவர்களும் தனித்தனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

சமரசம் ஆகவில்லை
ஒற்றைத் தலைமை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சார்பாக ஓ.பன்னீர்செல்வத்திடமும் சில முக்கிய நிர்வாகிகள் பேசினர். ஆனால் இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் கடந்த காலங்களில் முதலமைச்சர் வேட்பாளர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவி ஆகியவற்றை விட்டுக் கொடுத்து தியாகம் செய்திருக்கிறார். எனவே இனியும் தியாகம் செய்யமாட்டார் என்று ஓ.பி.எஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

இரட்டைத் தலைமையே
இந்நிலையில்தான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இரட்டைத் தலைமை முறையே தொடர வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், 14 பேர் கொண்ட உயரமட்டக் குழுவின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இக்கு வைத்து பேசிய ஓபிஎஸ்
அப்போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை கட்சியில் சேர்த்து முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் என்கிற ரீதியில் இக்கு வைத்துப் பேசியிருப்பது அரசியல் நோக்கர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவில் முக்கிய முடிவெடுக்கும் குழுவில் அவரை சேர்க்க வேண்டும் என ஓ.பி.எஸ் சொல்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை கட்சியில் சேர்க்கத் தயாராக இல்லாத நிலையில், ஓ.பி.எஸ் இவ்வாறு பேசியிருப்பது எடப்பாடிக்கு செக் வைக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

விலகி இருப்பவர்கள்
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவின் மூத்த முன்னோடிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களோடு உடனிருந்து பணியாற்றியவர்கள், 'சற்று விலகி இருப்பவர்கள்' அனைவரும் இணைந்து இன்று இயக்கத்தை பலப்படுத்த வேண்டிய நேரம் இது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு எழ வேண்டுமென்றால் இயக்கத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கட்சியை வழிநடத்த வேண்டும்.

இதுவரை பிரச்சனை இல்லை
நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இரட்டைத் தலைமைப் பதவியில் பணியாற்ற வேண்டிய சூழல் வந்தபோது, இருவரும் மனமொத்து பணியாற்றி வந்தோம். எங்கள் இருவரின் கூட்டுத் தலைமையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. திடீரென்று ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரலை எழுப்பியிருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை விஷயம் இப்போதும் பெரும் விவாதமாகியுள்ளது.

எனது நிலைப்பாடு
14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு எடுக்கும் முடிவை ஒருங்கிணைப்பாளர்கள் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவர்கள், கட்சியை உருவாக்கியவர்கள், முழுக்க முழுக்க சீனியர்களாக 14 பேர் நியமிக்கப்பட்டு, அவர்கள் முடிவு செய்து எங்களுக்கு கொடுக்க வேண்டும். அதை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்களான நாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications