இந்த பக்கம் சாயப்போறாரா? ‘தனி ரூட்’ - ஓபிஎஸ் டீமின் 3 தலைகள் நடத்திய சீக்ரெட் மீட்டிங்! என்னாச்சு?
சென்னை : ஓபிஎஸ் - ஈபிஎஸ் போட்டிக்கு மத்தியில், ஓபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளிகள், அதிமுக சீனியர் கேசி பழனிச்சாமியுடன் சீக்ரெட் மீட்டிங் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையுமே விமர்சித்து தனியாக ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறார் கேசி பழனிச்சாமி. கேசி பழனிசாமியின் பேச்சுகளை ஓபிஎஸ் டீம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கேசிபி சொல்லும் பாயிண்டுகள் பற்றி சட்ட வல்லுநர்களிடமே ஓபிஎஸ் ஆலோசித்திருக்கிறாராம். இதனால், கேசிபியை நம் பக்கம் அழைத்து வர வேண்டும் என்று சீனியர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஓபிஎஸ் அணியின் 3 முக்கிய தலைகள் கேசி பழனிசாமியுடன் ஒரு ரகசிய சந்திப்பை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், இதில் ஓபிஎஸ் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

கேசி பழனிச்சாமி
அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவராலும் கூட்டாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏவாக இருந்தவர் கேசி பழனிசாமி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது எனக் கோரி, அதிமுக நிர்வாகி போலவே தற்போதும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் கேசி பழனிசாமி. தமிழகம் முழுவதும் பயணித்து பல இடங்களில் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் கேசிபி.

கேசிபி போடும் திட்டம்
அதிமுகவுக்கு தலைமை தாங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார். அதுபோக, அவ்வப்போது ஜூம் மீட்டிங்குகளை நடத்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்குகளை நடத்தி இருக்கிறார் கேசிபி. எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்து, அடுத்த சில மாதங்களில் பொதுச்செயலாளருக்கு தனியாக தேர்தல் நடத்தி, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இரட்டை இலையும், சின்னமும் எங்களுக்குத்தான் என சொந்தம் கொண்டாடும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கேசிபி.

பாயிண்டா பேசுறாரே
இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே காட்டமாக விமர்சித்து வருகிறார் கேசி பழனிசாமி. அதிலும், ஓபிஎஸ்ஸை விட ஈபிஎஸ்ஸைத்தான் கடுமையாக விமர்சிப்பார் கேசிபி. எடப்பாடி பழனிசாமி பற்றிய சில ரகசியங்களையும் போட்டு உடைத்திருக்கிறார் கேசிபி. அவர் பேசிய பல விஷயங்களை ஓபிஎஸ் தரப்பினர் கையில் எடுத்து எடப்பாடியை ரவுண்டு கட்டியிருக்கின்றனர். சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.41,000 கோடி ரகசியம் மேட்டர் கூட அவர் ஒரு பேட்டியில் சொன்னதன் பிறகு ஓபிஎஸ் டீம் இறக்கியதுதான்.

மீண்டும் அணுகிய ஓபிஎஸ் டீம்
கேசி பழனிசாமியை தங்கள் அணிக்குக் கொண்டு வர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் கடந்த சில மாதங்களாகவே முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும், ஓபிஎஸ் தரப்பின் பேச்சுவாரத்தைகளை கேசிபி பழனிசாமி பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் தான், கட்சியில் தங்கள் பலத்தைக் கூட்டியே ஆகவேண்டும், நிர்வாகிகளை அனைத்து பதவிகளுக்கும் நியமிக்க வேண்டும் என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ள ஓபிஎஸ் டீம் மீண்டும் கேசிபி-யை அணுகியுள்ளது.

சீக்ரெட் மீட்டிங்
சமீபத்தில், ஓபிஎஸ் அணியின் சீனியர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கேசி பழனிசாமியை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, ஓபிஎஸ் நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படலாம். முக்கியமான பொறுப்பையும் தருகிறோம் எனத் தூண்டில் போட்டுள்ளனர்.

என்ன பதவி
அதற்கு கேசி பழனிசாமி, என்ன பதவி தருவீர்கள் என ஓப்பனாக கேட்டுள்ளார். கேசிபி டக்கென இப்படி கேட்டதால் ஷாக்கான ஓபிஎஸ் டீம், துணை பொதுச் செயலாளர் பதவி தருகிறோம் எனக் கூறியுள்ளனர். ஆனால், கேசிபியோ, உங்களை எல்லாம் விட சீனியர் நான் தான் என்று உங்களுக்கே தெரியும். அப்படியும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி தானா? என கொக்கி போட்டிருக்கிறார் கேசிபி.

கொக்கி - கணக்கு
இதையடுத்து, உங்களுக்கு என்ன பதவி வேண்டும் எனச் சொல்லுங்கள், பேசிப் பார்க்கலாம் என அவர்கள் கேசிபியிடம் மீண்டும் கேட்டுள்ளனர். ஆனாலும், அவர்கள் பேச்சுக்கு பழனிசாமி பிடி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கேசிபியை நம் பக்கம் கொண்டு வந்தால் எடப்பாடிக்கு இன்னும் சிக்கல் கொடுக்கலாம் என கணக்கு போட்ட ஓபிஎஸ் தரப்பின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
