விடாப்பிடி.. ஓபிஎஸ்ஸின் அடுத்த திட்டம் என்னனு பாருங்க.. “லிஸ்ட் ரெடி” - எடப்பாடி இடத்தில் யார்?
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 66 பேரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களை கட்சியின் புதிய நிர்வாகிகளாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மாற்றி மாற்றி ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர், எதிர் தரப்பு ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், இருதரப்பிலும் அடுத்து என்ன திட்டம் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த இருக்கின்றனர். இதற்கிடையே, கட்சியில் தான் தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வரும் ஓபிஎஸ் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

அதிமுகவில் பிளவு
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

போட்டி போட்டு நீக்கம்
அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடியாக ஓபிஎஸ், எடப்பாடி ஆதரவாளர்கள் 22 பேரை நீக்கினார். மேலும் 44 பேரை நேற்று கட்சியில் இருந்து அதிரடி நீக்கினார் ஓபிஎஸ். இதையடுத்து ஈபிஎஸ், மேலும் 21 ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இன்று இருவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் ஈபிஎஸ். போட்டி போட்டு இருதரப்பும் கட்சியை விட்டு நீக்கியதில் இதுவரை 66 பேர் ஓபிஎஸ்ஸால் நீக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பு 45 பேரை இதுவரை நீக்கியுள்ளனர்.

நிர்வாகிகள் நியமனம்
இதற்கிடையே, புதிய நிர்வாகிகளையும் நியமித்தார் ஈபிஎஸ். கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டார். அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன், காமராஜ், ப.தனபால், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேரை நியமித்தார் எடப்பாடி.

செல்லாது
தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிர்வாகிகள் பட்டியல் கட்சி சட்டப்படி செல்லாது என்றும், தங்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்துள்ளார். தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று வரை தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனவும், புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது எனவும் ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
அனால், எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகம் இரு தரப்பு மோதலால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அ.தி.மு.க அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்றக்கோரி தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். சீல் அகற்றப்படாத நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது.

ஏற்பாடு
அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு வழங்கியுள்ள வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என அவர் கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்து, நாளை மாலை 4 மணிக்கு கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை
தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் ஓபிஎஸ். இந்த ஆலோசனையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடியாக, புதிய நிர்வாகிகளை நியமிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். யார் யாரை எந்தெந்த பதவியில் நியமிப்பது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

பதவிகள்
தான் ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்கள், அவைத் தலைவர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமிக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலை திங்கட்கிழமை வெளியிடவும் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

பதவிகளில் யார்?
இப்போதே, ஓபிஎஸ் தரப்பு அறிவிக்கும் நிர்வாகிகள் பட்டியலில் யாருக்கு என்ன பதவி கிடைக்கும் என்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளன. ஓ.பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருந்து செயலாற்றும் சோழ மண்டல பிரமுகருக்கு எடப்பாடி வகித்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அல்லது அவைத் தலைவர் பதவி கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களாக எப்போதும் உடனிருக்கும் பலருக்கும் முக்கிய பதவிகளை தயார் செய்துள்ளாராம் ஓபிஎஸ்.

அறிவிப்பு வருமா?
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால் அவர் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானால், புதிய நிர்வாகிகள் நியமனம் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், இரு தரப்பும் மாறி மாறி நீக்கிக்கொண்டு, நிர்வாகிகளை அறிவித்துக் கொண்டிருந்தால் தொண்டர்களின் நிலை என்ன என்றும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications