கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முழுமையாக எப்போது பஸ்கள்? அமைச்சர் சொன்ன புது தகவல்
சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் எஸ்இடிசி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்றும், பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்தே கிளம்பும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் அப்போதே அதற்கான கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவர்.

இதனால் பண்டிகை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதன் பின்னர் தான் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ. 400 கோடி மதிப்பீட்டில் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி இந்த பேருந்து நிலையத்தை தொடங்கி வைத்தார்.
ஆம்னி பஸ்கள் எப்போது: கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி இங்கிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்னி பஸ்கள் இப்போது இங்கு இருந்து இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சற்று குழப்பம் இருந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இது தொடர்பாக கூறியதாவது:- தென் மாவட்டங்களுக்கு செல்லும் எஸ்இடிசி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் . பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்தே கிளம்பும். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடுக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம், மதுரை உள்ளிட்ட கோட்ட பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

என்னென்ன வசதிகள்: இன்று திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது உலகத்தரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 86 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் சார்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 14 நடைமேடைகள் உள்ளன. நாளொன்றுக்கு 840 தனியார் பேருந்துகளுடன் 2130 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இந்த பேருந்து நிலையத்தில் அவசர சிகிச்சை மையம், தாய்மார்களுக்கான பால் ஊட்டும் அறைகள், உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான தங்கும் விடுதிகள், கடைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்தனி கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications