மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும்..இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் - பொன்முடி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தங்களது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது.
அதில் இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆங்கிலத்துக்கு பதில் இந்தி
அமித்ஷா குழு அறித்த பரிந்துரையில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

திமுக போராட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக போராட்டம் அறிவித்து இருக்கிறது. அக்டோபர் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொன்முடி பேட்டி
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் ரூ.23.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது. நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றார்.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர்
90 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதே தமிழர்கள் பெருங்கோபம் கொண்டு இந்தி திணிப்பு நடவடிக்கையை தடுத்தனர். வரலாற்றின் பக்கங்களில் முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் என இடம்பெற்ற 1938-வது ஆண்டைய தாய்மொழி பாதுகாப்புக்காக தமிழர்கள் நடத்திய யுத்தத்தின் வரலாறு இது. 1930களின் தொடக்கத்தில் இருந்தே இந்தி திணிப்பு முயற்சிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம் என பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

மொழிப்போர் மறவர்கள்
கொந்தளித்த தமிழ்நாடு இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ல் 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என அரசாணையை வெளியிட்டார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. இதுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கவும் அடிப்படையாக அமைந்தது. ராஜாஜியின் உத்தரவால் தமிழகமே கொந்தளித்தது. இப்போராட்டத்தில் பெண்களும் சமளவில் பங்கேற்று சிறைக்கு சென்றனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் என எண்ணற்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திக்கு எதிரான மகளிர் மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்த யுத்த களத்தில்தான் சிறையிலேயே தாளமுத்து, நடராசன் என்கிற போராளிகள் மாண்டு போயினர். தாய்மொழி காக்க தன்னுயிரையே ஈந்த முதலாவது மொழிப்போர் மறவர்கள் இவர்கள்தான் என்று மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் பொன்முடி.












Click it and Unblock the Notifications