ஓபனா சொன்னா..ஒன்னுமேயில்லாத ஓபிஎஸ்? திக்கு தெரியாமல் ஓட்டக்கார ’தேவர் மகன்’.. பல்ஸ் பார்க்கும் திமுக
சென்னை: பாஜக கூட்டணியா? அல்லது திமுக கூட்டணியா? என தெரியாமல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதாக சொல்கின்றனர் மிச்சம் இருக்கும் அவரது ஆதரவாளர்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின், மீண்டும் கட்சிக்குள் நுழைய ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. பாஜக மேலிடத்தின் தலையீடும் இருந்தபோதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், தனது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிகாரம் வைக்க நவராக அதிமுகவில் வளம் வந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் என்றே கூறலாம். கட்சியின் பொருளாளராக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பணியாற்றியவர்.
முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர். ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த போதெல்லாம் அவரது இடத்தில் முதலமைச்சராக ஆட்சியை நடத்தியவர். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தற்போது அவரது அரசியல் அஸ்தமனமாக தொடங்கியது.

ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடு பழனிசாமியால் வெளியேற்றப்பட்டதிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்த பல முக்கிய ஆதரவாளர்கள் தங்களது அரசியல் பயணத்தை தனித் தனியாகத் தொடங்கியுள்ளனர். சிலர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், சிலர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வட்டம் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக சிக்கல்
இந்த நிலையில், புதிய கட்சி தொடங்கி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறுவது குறித்த யோசனை பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், வயது, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆதரவாளர்கள் சிதறி வருவது போன்ற காரணங்களால், புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த அழைப்பையும், அவர் இதுவரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
திமுக கூட்டணி
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை திமுக கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டு வ்ருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் சேகர்பாபு மூலமாக இதற்கான தகவல்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக கூட்டணியில் இணைந்தால், எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என மக்கள் கருதுவார்களோ என்ற அச்சம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் எதிர்காலம்
இதன் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு திமுகவுக்கு தேர்தலின் போது எந்த அளவுக்கு பயன் தரும் என்பது குறித்து கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் ஓ.பன்னீர்செல்வம் வழியாக திமுகவுக்கு வருமா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது. இவை பெரும்பாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஓட்டுகள் என்பதால், அவை எளிதாக திமுகவுக்கு மாறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
வைத்திலிங்கம்
சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது, டெல்டா மாவட்டங்களில் ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், திமுக சார்பில் நடத்தப்பட்ட உள்கட்சிச் சர்வேகளில், அதிமுக ஆதரவு ஓட்டுகள் திமுகவுக்கு பெரிய அளவில் வர வாய்ப்பில்லை என்பதே தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக சில சதவீத ஓட்டுகள் மட்டுமே நகரும் என்ற மதிப்பீடும் முன்வைக்கப்பட்டுள்ளது.
திமுக யோசனை
இதனால், பன்னீர்செல்வத்தை திமுக கூட்டணியில் சேர்ப்பது தேர்தல் ரீதியாக லாபமா, அல்லது தேவையற்ற சுமையா என்ற குழப்பத்தில் திமுக தலைமை தடுமாறி வருகிறது. தென் மாவட்டங்களில் தற்போது அவருக்கு எவ்வளவு உண்மையான ஆதரவு உள்ளது என்பதை அறிய, தரைமட்ட தகவல்களை தீவிரமாக சேகரித்து வருகிறது திமுக. இதன் அடிப்படையில் தான், ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications