ஸ்டாலின் ஆட்சி.. தப்பிக்க முடியாது.. திடீரென கியர் மாற்றிய புகழேந்தி.. எடப்பாடி மீது சரமாரி அட்டாக்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, முதல்வர் ஸ்டாலினை பாராட்டும் விதமாகப் பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சிறையில் இருந்து கட்சியை நடத்துவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் புகழேந்தி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை கிடையாது, நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது எனப் பேசியுள்ளார் புகழேந்தி.

ஈபிஎஸ்ஸுக்கு வெற்றி
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இன்று சீல் அகற்றப்பட்டு அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தரப்பு
அதிமுக தலைமை அலுவலக விவகாரத்தில் ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராகி வருகின்றனர்.

பெங்களூரு புகழேந்தி
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று என்னுடைய பிறந்தநாள். எப்போதும் பிறந்தநாள் என்றால் ஜெயலலிதாவிடம் ஆசி பெறுவது வழக்கம். அப்படித்தான் கடந்த 25 ஆண்டுகளாக ஆசி பெற்று வருகிறேன். அதன்படி பிறந்தநாளான இன்று ஜெயலலிதாவிடம் ஆசி பெற வேண்டும் என நினைவிடம் வந்து மரியாதை செலுத்தியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்
நேற்றைய தீர்ப்பு எந்த வகையிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு இல்லை. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருக்கிறோம். அங்கு எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். அதிமுக அலுவலகம் எம்ஜிஆரின் துணைவியார் ஜானகியால் கட்சிக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் ஓபிஎஸ். கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு அவர் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?

மகாலிங்கம் தான் காரணம்
அன்று காவல்துறை இரண்டு தடுப்புகளையும் திறந்து வைத்திருந்தால் கொலை கூட நடந்திருக்கும். இரண்டு தரப்பினருக்கும் இடையில் தான் மோதல் நடந்தது ஆனால் ஒரு தரப்பு எனக் கூறுவது தவறானது. ஜூலை 11ஆம் தேதி நடந்த அனைத்து அக்கிரமத்திற்கும் தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் தான் காரணம்.

சிறையிலிருந்து கட்சி நடத்துவாரா?
கடந்த சில மாதங்களாக அனைத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சிறையிலிருந்து கட்சியை நடத்துவாரா? போயஸ் தோட்ட இல்லம் வழக்கில் வந்ததைப் போல இந்த வழக்கிலும் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும்." எனத் தெரிவித்துள்ளார்.

பாலுக்கு பூனை காவலா?
மேலும், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளது குறித்துப் பேசியுள்ள புகழேந்தி, பாலுக்கு பூனையை காவல் வைப்பது போல், அதிமுகவின் பணத்திற்கு திண்டுக்கல் சீனிவாசனை வைத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.

ஸ்டாலினை விமர்சிக்க தகுதி இல்லை
மேலும் பேசிய புகழேந்தி, ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது. மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி போராட்டத்தினை அறிவித்திருக்கிறார். ஆனால் அவருடைய ஆட்சியின் செயல்களால் தான் மின் கட்டணம் உயர்த்தப்படும் நிலைக்கு தமிழ்நாடு தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.

நடப்பது ஸ்டாலின் ஆட்சி
தற்போதைய முதலமைச்சர் கொரோனா தொற்றில் பதிக்கப்பட்டு இருந்தபோது கூட கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தூத்துக்குடியில் 13 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? அந்த சம்பவத்தை டி.வியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாகக் கூறினார். நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது" எனக் கூறியுள்ளார்.
Recommended Video

அப்பாவு உயர்ந்த மனிதர்
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியைப் பறித்து, ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளது குறித்துப் பேசிய புகழேந்தி, சபாநாயகர் அப்பாவு திறமை வாய்ந்தவர், உயர்ந்த மனிதர், உயர்ந்த உள்ளத்திற்கு உரியவர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனத்தில் அவர் நியாயமான தீர்ப்பு வழங்குவார் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications