2022 நினைவுகள் : பாமக தலைவராக அன்புமணியின் 6 மாதம்! நீங்க எத்தனை மார்க் போடுவீங்க! ரெடி ஸ்டார்ட்!
சென்னை : பாமக அன்புமணியை பொறுத்தவரை 2022ஆம் வருடம் மிக முக்கியமான வருடமாகும். ஏனெனில் இந்த வருடம் மே மாதம் தான் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தலைவராக 2022ஆம் ஆண்டில் அவருடைய செயல்பாடு எப்படி இருக்கிறது?
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், அன்புமணி மாற்றம் முன்னேற்றம் என்பதை முன்வைத்து முதலமைச்சர் வேட்பாளராக நின்று, மக்கள் மத்தியில் வாக்குகளை கோரி நின்றார். ஆனால் தேர்தலில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
அதன் பின்னர் நீர் மேலாண்மை, விவசாயிகள் நலன், சுற்றுச்சூழல், மதுவிலக்கு போன்ற மாறுபட்ட அரசியல் களத்தினை தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். இதனையடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது. அதிமுக ஆட்சியை இழந்த போதிலும் பாமக உறுப்பினர்கள் நீண்ட காலத்திற்கு பின் சட்டமன்றத்தில் நுழைந்தனர்.

பாமக கூட்டணி
பாட்டாளி மக்கள் கட்சி தலைவராகும் முன்னரே தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியவர். தலைவர் ஆன பிறகும் அந்த விழிப்புணர்வு பயணங்களை தொடர்ந்து வருகிறார். தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டவர், சோழர் நீர் பாசனத்திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி, அரியலூர் மாவட்டத்தில் காவிரி நீரை கொண்டு ஏரிகளை நிரப்ப வேண்டும் என இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

நீர்ப்பாசன தேவைகள்
இதனிடையே சேலம் மாவட்டத்தில் இருக்கும் பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வார வேண்டும் எனவும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கொசஸ்தலை ஆற்றினை பாதுகாக்க, தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிரான போராட்டத்தை பள்ளிப்பட்டு நகரில் நடத்தினார். கொங்கு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அத்திக்கடவு அவினாசி திட்டம், சேலம் மேட்டூர் காவிரி உபநீர் திட்டம் போன்ற திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும், அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அதேபோன்று தமிழக கேரள அரசுகள் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய நீர் பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கு இரண்டு மாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேச வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறார். தமிழகத்திற்கு நீர் வருவதை தடுக்கும் விதமாக கர்நாடக அரசு மேக தாது பகுதியில் அணை கட்டுவதை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

ஆன்லைன் சூதாட்டம்
தலைவராக பொறுப்பேற்றவுடன் அன்புமணி நடத்திய முதல் களப்போராட்டமே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பது தான். சென்னையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து ஆராய்வதற்கான குழுவை தமிழக அரசு அமைத்தது. பின்னர் நீதிபதி சந்துரு குழுவானது அளித்த அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. அது தொடர்பாக சட்டசபையில் இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாத நிலையில், சட்டசபையில் இயற்றப்பட்ட அவசரச் சட்டம் காலாவதி ஆவதை முதன்முதலில் அன்புமணி தான் அரசுக்கு சுட்டிக்காட்டினார்.

போதைப் பொருள் ஒழிப்பு
தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரமானது மலிவாக பெருகிவிட்டது. பள்ளிக் கல்லூரிகளில் கூட எளிதாக போதைப் பொருள்கள் கிடைப்பதாக பெற்றோர்கள் வருத்தமாக சொல்வதாகவும், அதனை ஒழிக்க குரல் கொடுக்குமாறு பெற்றோர்கள் வலியுறுத்துவதாக அரசுக்கு கூறும் அன்புமணி, மது, ஆன்லைன் சூதாட்டம், போதை பொருள் மூன்றும் தமிழகத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளதையும் சுட்டி காட்டுகிறார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தமிழக அரசியலில் நீண்ட காலமாக பாட்டாளி மக்கள் கட்சி தான் பேசி வருகிறது.

என்எல்சி நிறுவன எதிர்ப்பு
என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டமே பாதிக்கப்பட்டிருக்கிறது எனவும், அதனை பாதிக்கப்பட்ட பேரிடர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது எனவும் நாடாளுமன்றத்தின் வாயிலாக மக்களுக்கு தெரிய வைத்தார். நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு, கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத நிலையில் அதனை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும். அதேபோல காலநிலை மாற்றத்தினால் நிலக்கரி எரிபொருளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், சுரங்க விரிவாக்கம் என்பது நல்லதாக இருக்காது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கட்சிப்பணி
கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்பட்ட பொதுக்குழுவிலும் கலந்து கொண்ட அன்புமணி, கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மீண்டும் சென்று, அங்கு புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சந்தித்து எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் நிலை குறித்து அலசி ஆராய்ந்து, செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தி வருகிறார்.

கொங்கு பகுதியில் கவனம் :
வடமாவட்டங்களை கடந்து கொங்கு பகுதியிலும் அடிக்கடி தனது சுற்றுப்பயணங்களை அன்புமணி அமைத்து வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி, கோபிசெட்டிபாளையம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசி, கோவை மாவட்டம் என பல இடங்களில் அவர் கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். கட்சியை மீண்டும் பலப்படுத்தும் அவருடைய திட்டமானது கை கூடும் வகையிலும் அமைந்திருக்கிறது.

மாற்றம்
தலைவரான பின்னர் பிற கட்சிகளையோ, அதன் தலைவர்களையோ விமர்சனம் செய்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். மக்களுக்கு தேவையானதை கோரிக்கையாக வைக்கிறார் அதற்கு அனைத்து கட்சி மக்களின் ஆதரவையும் வெளிப்படையாகவே கேட்கிறார். அதேபோல அதிமுக உட்கட்சி விவகாரத்திலும், அது அவர்களின் கட்சி அவர்கள் பிரச்சனையை அவர்கள் சரி செய்து கொள்வார்கள் என நாகரிகமாக ஒதுங்கியும் கொள்கிறார். அதிரடி அரசியலை எதிர்பார்க்கும் சிலருக்கு இந்த போக்கில் விருப்பம் இல்லை என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். 2022ல் தலைவராகி இருக்கும் அன்புமணி நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் குறிவைத்தே காய்களை நகர்த்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications