அதிமுக வன்முறை.. 60 ர.ரக்களுக்கு போலீசார் சம்மன்.. வீடியோவில் இருந்த ‘முக்கிய புள்ளிகள்’ தலைமறைவு?
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களிடம் இன்றும், நாளையும் ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சம்மன் அனுப்பப்பட்டுள்ள சிலர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதேநேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதிமுக பொதுக்குழு
சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 11ஆம் தேதி காலையில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பரபரப்பான சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பங்கேற்பில் அன்று காலை 9.40 மணிக்கு கூடியது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார்.

ஓபிஎஸ் செய்கை
அதற்கு முன்பாகவே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டனர். இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டனர். இது பெரும் வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் கட்டைகள் மற்றும் கற்கள் கொண்டு மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்
அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கதவுகளை அடித்து உடைத்து உள்ளே சென்றனர். ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழகத்தின் உள்ளே நுழைந்து, பேனர்களில் இடம்பெற்றிருந்த எடப்பாடி பழனிசாமியின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தனர். அலுவலகத்திற்குள்ளும் புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

ரத்தக்களறி ஆன ராயப்பேட்டை
இந்த மோதலின்போது ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கல்வீச்சு, உருட்டுக்கட்டை மோதல் சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகமே போர்க்களமானது. வானகரத்தில் பொதுக்குழு தொடங்கிய நேரத்தில் ராயப்பேட்டை ரத்தக்களறியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு வெடித்த வன்முறையை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

47 பேர் காயம்
இந்த மோதலில் போலீஸார், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என 47 பேர் காயமுற்றனர். 2 தனியார் பேருந்துகள், கார், பைக்குகள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

14 பேர் கைது
இதுதொடர்பாக முதற்கட்டமாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 30 பேர்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 30 பேர் என மொத்தம் 60 பேருக்கு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இன்றும் நாளையும் விசாரணை
இன்று காலை 11 மணிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், நாளை காலை ஈபிஎஸ் ஆதரவாளர்களும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று போலீசாரின் விசாரணைக்காக ஆஜராகவுள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

தலைமறைவு?
இதில், சம்மன் அனுப்பப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் சிலர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கலவரம் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்பதால், தலைமறைவாக இருந்து முன் ஜாமீன் பெறுவதற்காக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பலர் சில நாட்களாக வெளியில் தலைகாட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications