ராஜ்பவன் பொங்கல் விழா.. "தமிழ்நாட்டை" தவிர்த்த ஆளுநர்..புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பழனிச்சாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்ற நிலையில் முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்பிக்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் என யாருமே விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெறும். அந்த விழாவில் பங்கேற்க முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்.
இந்த முறை முதல்முறையாக ஆளுநர் ரவியின் உத்தரவின்படி ஆதீனங்கள், கிறிஸ்துவ பிஷப்புகள், முஸ்லீம் மத குருமார்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்கள, வீராங்கனைகள், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள், சமூகவலைதள பிரபலங்கள், பழங்குடியின மாணவர்கள், சிறப்பாசிரியர்கள், பிரதமரின் மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டப்பட்டவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் போன்றோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர்
இது தவிர வழக்கம் போல் முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரமுகர்கள் என 1800-க்கும் மேற்பட்டோருக்கு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. விழா இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்குகிறது.

என்னென்ன நிகழ்ச்சிகள்
விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என தமிழகத்தின் கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. உடல் நலம் பேணும் 22 வகையான பாரம்பரிய உணவு வகைகள் விருந்தாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வெர்சஸ் தமிழகம்
தமிழ்நாடு வெர்சஸ் தமிழகம் என்ற பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையில் முக்கியமான வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் உரையை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நடத்திக் கொண்டிருந்த போதே அவையை விட்டு வேகமாக வெளியேறினார் ஆளுநர் ரவி.

சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அவையில் என்ன நடந்தது என்பது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரமும் தமிழக அரசும் தனித்தனியே அறிக்கை மூலம் தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அடுத்த நாளே ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்படவுள்ள பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என மாற்றப்பட்டிருந்தது. அது போல் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் புறக்கணிக்கப்பட்டு மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது. ஆளுநர் மாளிகையிலிருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும் தமிழக அரசின் இலச்சினையும் இருந்த நிலையில் தற்போது இந்த மாற்றம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில் அரசு சார்பில் யாருமே பங்கேற்காமல் விழாவை புறக்கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications