கட்டுமான முறைகேடு: மாஜி அமைச்சர்களை எப்படி சும்மா விட முடியும்? நடவடிக்கை உறுதி.. பிடிஆர் அதிரடி
சென்னை: அரசு கட்டிட முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? இது ஜனநாயக நாடு என்று, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாக தெரிவித்தார்.
Recommended Video
மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 163 பயனாளிகளுக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

குடிநீர் மீட்டர்கள்
பின்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது; குடிநீர் அதிகம் பயன்படுத்துபவர்களின் வேறுபாட்டை கண்டறியவே பயன்பாட்டை கணக்கிட வேண்டும். குடிநீர் மீட்டர் பொருத்துவது என்பது ஏழை எளிய சாமானிய மக்களுக்கு தான் நல்லது.

பதில் சொல்ல வேண்டும்
மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்துள்ளது. 110 டன் எடையுள்ள கட்டுமானத்தை ஹைட்ராலிக் லிப்ட் வைத்து தூக்கும் போது இரண்டே பணியாளர்கள் இருந்துள்ளனர். உதாரணமாக என் நிறுவனமாக இருந்திருந்தால் நானோ (அல்லது) என் மேலாளரோ வேலை இடத்தில் இருந்திருப்போம். ஆனால் அங்கு யாரும் இல்லை. படிப்பறிவற்ற உபியை சேர்ந்த இளம் வயதினர் இருந்துள்ளனர். பாலம் விபத்து சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
சென்னை குடியிருப்பு பலவீனமாக உள்ள புகார் என்பது ஒப்பந்ததாரர் தவறான பொருட்களை பயன்படுத்தி கட்டியுள்ளதால் எழுந்துள்ளது. இதை, மேலாண்மை கண்காணிப்பு செய்ய வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.

மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை
அரசு கட்டிடங்கள் முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும் போது அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? இது ஜனநாயக நாடு. கடந்த பத்தாண்டு காலம் தவறான மேலாண்மை நடந்துள்ளது. என் துறை சம்மந்தப்பட்ட எதுவுமே என் கண்ணுக்கு தெரியாமல் என் அனுமதி, கையெழுத்து இல்லாமல் நடைபெறக்கூடாது என்ற வழிமுறையை நானே உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். எனக்கு தெரியாமலே நடந்தாலும் யார் துறைக்கு அமைச்சரே அவர் தான் பொறுப்பேற்க முடியும். அவரை எப்படி கழட்டி விட முடியும் என்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

எந்தெந்த முன்னாள் அமைச்சர்கள்
எந்தெந்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, எங்கெல்லாம் தவறு நடந்துள்ளதோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications