வைகோ பிரிஞ்சபோது ஜெயலலிதா என்ன செஞ்சாங்க தெரியுமா? முதல்வருக்கு கோரிக்கை வைத்த புகழேந்தி! என்னவாம்?
சென்னை : அதிமுகவிற்குள் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், திமுகவில் இருந்து வைகோ பிரிந்தபோது ஜெயலலிதா செய்த காரியத்தை சுட்டிக் காட்டியுள்ள புகழேந்தி முதல்வரும் அதே போல நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு இணையாக தற்போது ஜெயலலிதா குடியிருந்த பங்களாவான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
சென்னை போயஸ் கார்டன் பங்களாவிற்கு அடுத்ததாக ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த இடம் என்றால் அது கோடநாடு பங்களா தான் கடந்த ஆண்டுகளில் முதல்வரின் முகம் அலுவலகம் ஆகவும் கோடநாடு பங்களா செயல்பட்டு இருக்கிறது.

கொடநாடு விவாகாரம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அங்கு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் மர்ம மரணங்களுக்கும் விடை கிடைக்காத நிலையில், இது தொடர்பாக அதிமுகவிலேயே குழப்பம் நிகழ்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் இந்த பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. அப்போது காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, சந்தோஷ் சமி, மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதிமுகவில் குழப்பம்
இதில், முதல் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்ற 10 பேரும், கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, கோத்தகிரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், போலிஸார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 10 பேர் சம்பந்தப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் 97 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை வழக்கில் முன்னேறம் இல்லை. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 'ஒரு முக்கிய தலைவர்'க்கு சம்பந்தம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பெங்களூரு புகழேந்தி
இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் உரிய முறையில் செயல்படவில்லை எனவும் முதல்வரை இதில் நேரில் தேட வேண்டுமென அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆன புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசி அவர்." தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை விட இந்த விவகாரம்தான் சூடு பிடித்திருக்கிறது. கொலை கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அதிமுகவில் திடீரென பதவிகள் வழங்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இதனை அதிமுக தொண்டர்கள் பலரை விரும்பவில்லை . இதனால் இந்த கொலை விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்குமோ என்ற யூகங்களும் சந்தேகங்களும் எழுந்து வருகிறது. இது நல்லதல்ல. எனவே தற்போதுள்ள விசாரணை அதிகாரிகளை மாற்றிவிட்டு உள்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

மதிமுக வைகோ
மேலும் ஒரு தகவலையும் நம்மிடம் பகிர்ந்துள்ள புகழேந்தி," திமுகவிலிருந்து வைகோ தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் பிரிந்து சென்ற போது சென்னையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பிரம்மாண்ட பேரணி ஒன்றை மேற்கொண்டார். அப்போது அந்தப் பேரணி சென்னை மெரினா கடற்கரையில் நிறைவடைய இருந்தது. அண்ணா சாலை வழியாக செல்லும் போது அங்கே திமுக அலுவலகம் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட அபாயம் இருந்தது.

ஜெயலலிதாவின் கட்சி
இதனை அறிந்த அப்போதைய முதல்வரான ஜெயலலிதா காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து திமுக அலுவலகத்திலும் தொண்டர்கள் இருப்பார்கள் இவர்களும் ஊர்வலம் சென்றால் இருதரப்புக்குமே பாதிப்பு ஏற்படும். எனவே அவர்களை தேவர் சிலை வழியாக மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினார். மற்ற கட்சியினர் கூட பிளவுபடக்கூடாது என்று எண்ணும் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியில் தற்போது இந்த விவகாரத்தில் பிளவு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications