கியரை மாற்றிய ரஜினிகாந்த்.. செம ஆக்டிவ்.. அரசியலுக்கு 'வரமாட்டேன்னு' சொன்னீங்களே.. சரமாரி கேள்விகள்
சென்னை: உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த ரஜினிகாந்த் மீண்டும் கியர் மாற்றி ஆக்ஷனில் இறங்கி உள்ளார்.
ஹைதராபாத் நகரில் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்ற போது ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் டிசம்பர் இறுதியில் திடீரென ரஜினிகாந்த் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை ஏற்று அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

அண்ணாத்த படப்பிடிப்பு
இதனால் அவர் அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களும் சில கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர். இனிமேல் தேர்தல் முடிவடைந்த பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அவ்வாறு செய்தால் தான் தனது அரசியல் நிலைப்பாடு பற்றிய முடிவுக்கு அவர் நியாயம் கற்பிப்பதாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் சில நாட்களில் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது அரசியல் வருகையை ஆவலோடு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓட்டு கேட்க முடியாது
அரசியலில் வந்து ஓட்டு கேட்க முடியாது, திரைப்படத்தில் நடிக்க மட்டும் முடிகிறதா என்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் பலரும் எழுப்பினர். இதற்கு அடுத்த திருப்பமாக திடீரென சசிகலா உடல்நிலை பற்றி விசாரித்துள்ளார் ரஜினிகாந்த். டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் இந்த தகவலை போட்டு உடைத்தார். இதுவரை ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இதை மறுக்கவில்லை, ஏற்கவும் இல்லை. அப்படி என்றால் ரஜினிகாந்த் சசிகலாவுக்கு போன் போட்டது உண்மை என்று தெரிகிறது.

சசிகலாவுக்கு போன்
சசிகலா அரசியலுக்கு நேர் எதிர் துருவத்தில் இருக்கக்கூடியவர்கள், ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, சசிகலாவுக்கு போன் போட்டு ரஜினிகாந்த் விசாரித்துள்ளார் என்றால் எந்த தரப்பையும் பகைத்துக் கொள்ளக்கூடாது.. எல்லா தரப்பிலும் தனக்கு ஆட்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரே என்று குமுறல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அரசியல் ஆசை இல்லாதவர் சசிகலாவுக்கு ஏன் போன் போட வேண்டும் என்ற கேள்விகளையும் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

தனுஷ் வீட்டு பூஜை
இந்த நிலையில்தான் போயஸ்கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூஜையில் இன்று ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இப்படி பலபேர் கூடும் நிகழ்ச்சிகளில் கூட இப்போது ரஜினிகாந்த் பங்கேற்க தொடங்கியுள்ளார். அடுத்ததாக படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். ஒரு பக்கம் சசிகலாவுக்கு போன் போட்டுள்ளார். மொத்தத்தில் கியர் மாற்றியுள்ளார் ரஜினிகாந்த். தனது அரசியல் பற்றி இனிமேல் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள், மறந்திருப்பார்கள், நாம் வழக்கம் போல நமது வேலையை ஆரம்பித்து விடவேண்டியதுதான் என்ற முடிவில் இருப்பதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.