படையப்பா படம் பார்த்துவிட்டு கருணாநிதி சொன்ன விஷயம்.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் பகிர்ந்த வைரமுத்து!
சென்னை: ரஜினிகாந்த்தின் 'படையப்பா' திரைப்படம் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து படையப்பா படம் பார்த்துவிட்டு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி சொன்னது பற்றி கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் இன்று. ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று படையப்பா திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

1999ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படையப்பா படத்தை 25 ஆண்டுகள் கழித்து இன்று மறுவெளியீடு செய்துள்ளனர். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன், நாசர், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். வைரமுத்து பாடல்கள் எழுதினார்.
இந்நிலையில் படையப்பா திரைப்படத்தை பார்த்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, சொன்ன விஷயத்தை கவிஞர் வைரமுத்து, படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆகும் இன்றைய நாளில் பகிர்ந்து கொண்டுள்ளார். வைரமுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு
— வைரமுத்து (@Vairamuthu) December 12, 2025
பரபரப்புக் குறையாமல்
வெளியாகிறது படையப்பா
மூங்கில் குழாயில் அடைத்து
மூடிப் புதைக்கப்பட்ட தேன்
கால்நூற்றாண்டுக்குப் பிறகு
தோண்டி எடுக்கப்படுகையில்
வீரிய பானமாய்
வெளிப்படுவது மாதிரி,
காலம்கடந்தும் கலக்கவருகிறது
படையப்பா
நான் வெறியெடுத்துப்… pic.twitter.com/TkITqwJN4a
இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு
பரபரப்புக் குறையாமல்
வெளியாகிறது படையப்பா
மூங்கில் குழாயில் அடைத்து
மூடிப் புதைக்கப்பட்ட தேன்
கால் நூற்றாண்டுக்குப் பிறகு
தோண்டி எடுக்கப்படுகையில்
வீரிய பானமாய்
வெளிப்படுவது மாதிரி,
காலம்கடந்தும் கலக்க வருகிறது
படையப்பா
நான் வெறியெடுத்துப்
பாட்டெழுதிய படங்களுள்
படையப்பாவும் ஒன்று
'வெற்றிக்கொடிகட்டு' பாடல்
எப்போது கேட்டாலும்
என் அத்துணை நரம்புகளும்
பாம்புகளாய்ப் படமெடுக்கும்
மறக்க முடியாத
ஒரு நிகழ்வு சொல்கிறேன்:
படத்தின் முதல் பிரதி
முதலமைச்சருக்குப்
போட்டுக் காட்டப்படுகிறது
விஜயராகவா சாலையில்
தேவி ஸ்ரீதேவி
குறுந்திரையரங்கில்
திரையீடு நிகழ்கிறது
அந்நாள் முதலமைச்சர்
முத்தமிழறிஞர் கலைஞர்,
மேலும் சில அமைச்சர்கள்,
ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார்
நான் மற்றும் சிலர்
படம் பார்க்கிறோம்
படம் நிறைந்தது
கலைஞர் வெளியே வருகிறார்;
யாரும் இல்லை
தினத்தந்தி நிருபர்
கங்காதரன் மட்டும்
எப்படியோ துப்பறிந்து வந்துவிடுகிறார்
"ஐயா!
படம் எப்படி இருக்கிறது" என்று
ஒரு வினாவை வீசுகிறார்
சற்றும் இடைவெளி இல்லாமல்
"படையப்பா;
பழைய சாதனைகளை
உடையப்பா என்றிருக்கிறது"
என்று சொல்லிவிட்டுக்
காரில் ஏறுகிறார் கலைஞர்
அவர் வாக்குப் பொய்க்குமா?
பலித்தது
தன் பிறந்தநாளில்
ரசிகர்களுக்கு ரஜினி வழங்கும்
பாசப் பரிசு படையப்பா
தங்கம் பழையதாகலாம்;
விலை குறையுமா?
இவ்வாறு பதிவிட்டுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications