வாலும் தலையும் ஒரே மாதிரி இருக்கே.. மண்ணுக்குள் ஓடிய 2 தலை பாம்பு.. உண்மை என்ன தெரியுமா?
சென்னை: பாம்புகளை பார்த்தாலே பலரும் பயப்படுவார்கள்... அதிலும் இரண்டு தலைகள் இருப்பது போன்ற தோற்றத்தில் ஒரு பாம்பு தென்பட்டால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் அப்படியொரு பாம்பு சிக்கியுள்ளது. ஆனால், உண்மையிலேயே அந்தப் பாம்புக்கு இரண்டு தலைகள் இருக்கிறதா? அதன் வாலும் தலையும் ஒரே மாதிரி இருப்பதற்கு பின்னால் உள்ள சுவாரசியமான காரணம் என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மங்காவ்ன் தாலுகாவின் தால்கர் கிராமத்தில் கோரக்ஷநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்று வித்தியாசமான தோற்றம் கொண்ட ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

கோயிலில் தென்பட்ட பாம்பு
கோயில் வளாகத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்களுக்கு இடையே அந்த பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.. அத்துடன் ராய்காட் மாவட்ட வனவிலங்கு பாதுகாவலராகவும் ஆராய்ச்சியாளராகவும் செயல்படும் ஷாந்தனு குவேஸ்கர் என்பவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்த கொஞ்ச நேரத்தில், ஷாந்தனு குவேஸ்கர், அவருடைய உதவியாளர் மிலிந்த் காடே மற்றும் வனக்காவலர் கோரக் தஹிபாலே ஆகியோர் கோயிலுக்கு விரைந்து வந்தனர்.. ஆனால், பாம்பை காணவில்லை.. இதனால் கோயிலுக்குள்ளேயே சுற்றுமுற்றும் தேட ஆரம்பித்தனர்.. பிறகு, கோயிலின் சுற்றுச்சுவர் அருகே இருந்த ஒரு குழாய் வழியாக அந்தப் பாம்பு மெல்ல வெளியே வந்தது..
மண்ணுக்குள் நுழைந்த பாம்பு
அங்கிருந்து அருகிலிருந்த மும்பை-கோவா நெடுஞ்சாலையை நோக்கி அந்தப் பாம்பு நகர்ந்து கொண்டிருந்தது. அது பிஸியான சாலை என்பதால், நிறைய வாகனங்கள் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தன.. பாம்பு எங்கே ஊர்ந்து போய் சாலைக்கு சென்றுவிடுமோ? வாகனங்களில் சிக்கி விடுமோ? என்று அங்கிருந்தோர் பதைபதைத்தனர்..
ஆனால், அதற்குள் ஷாந்தனு குவேஸ்கர், வனக்காவலர் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் பாம்பை பத்திரமாகப் பிடித்து விட்டார்.. பிறகு, அருகிலிருந்த அடர்ந்த பகுதியில் பாம்பை கொண்டு போய் விட்டனர்.. மண்ணுக்குள் வாழும் பழக்கம் கொண்ட அந்தப் பாம்பு, அடுத்த நிமிடமே மண் மற்றும் இலைகளுக்குள் சென்று மறைந்துவிட்டது.
உண்மையில் இரண்டு தலைகளா?
ஆனால், இந்த பாம்பு சற்று வித்தியாசமானது.. பாம்பின் பெயர் ரெட் சாண்ட் போவா (Red Sand Boa). இது விஷமற்ற பாம்பு. பெரும்பாலும் மண்ணுக்குள் மறைந்து வாழக்கூடியது.. சட்டென பார்த்தால், இதற்கு 2 தலைகள் இருப்பது போல தோன்றம்.. அதாவது தலையும், வாலும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும்..
ஆனால், உண்மையில் 2 தலைகள் கிடையாது. இதன் வால் பகுதி, தலையை போலவே மழுங்கி உருண்டையான தோற்றத்தில் இருக்கும். இதனால்தான் பார்ப்பதற்கு இரண்டு தலைகள் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அதனால்தான் இதை பலரும் இருதலைப் பாம்பு என்று அழைக்கிறார்கள்.
ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா
இந்த பாம்பின் மற்றொரு ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? எதிரிகளிடமிருந்து தப்பிக்க தனது வால் பகுதியை தலையைப் போலக் காட்டுமாம்.. இதனால் எதிரிகள் அதன் வாலைத் தலையாக நினைத்து தாக்க வாய்ப்புள்ளது. எலிகள், சுண்டெலிகள், பல்லிகள் போன்றவை இதன் முக்கிய உணவாகும். பெரும்பாலும் மண்ணுக்குள் மறைந்து வாழும் இந்தப் பாம்பு, இரவு நேரங்களில் அதிகம் வெளியில் நடமாடும்.
அதேசமயம் இந்த பாம்பை பற்றி நிறைய மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. அதாவது இந்த பாம்பை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும், புதையல் கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கைகள் உண்டு.. இதுபோன்ற நம்பிக்கைகளால் சட்டவிரோதமாக இந்தப் பாம்புகள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இந்த பாம்புகளுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. அதனால்தான் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இந்த பாம்புக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொல்லக்கூடாது
பாம்பு பிடி வீரர் ஷாந்தனு குவேஸ்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "வனவிலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில்தான் பாதுகாப்பாக இருக்கும்.. மனிதர்களின் தலையீடும் இயற்கையான வாழ்விடங்கள் அழிக்கப்படுவதும் காரணமாக வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன..
குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பார்த்தால் அவற்றைக் கொல்லவோ, தாங்களாகவே பிடிக்க முயற்சி செய்யவோ கூடாது. உடனடியாக வனத்துறையினர் அல்லது பயிற்சி பெற்ற பாம்பு மீட்புப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.




Click it and Unblock the Notifications
