ரவிசங்கர் விவகாரத்தை மறைக்கவா 30 எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்? விஜய் பிம்பத்துக்கு பின்னால் நடப்பது என்ன?
சென்னை: "பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் என்பது மிகவும் தீவிரமான பிரச்சனை. அதிலும் மாவட்ட ஆட்சியரே சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.. அதனால், இந்த விவகாரத்தை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். தேவையானால் சம்பந்தப்பட்டவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கலாம். குறைந்தபட்சம் வார்னிங் கடிதமாவது தரலாம். விசாரணை நடத்தலாம். முதற்கட்ட நடவடிக்கையாவது எடுக்கலாம்" என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்
News Focus Tamil என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "ஊடகங்கள் நம்மை மதிப்பதில்லை. அழையா விருந்தாளிகளைவிட மோசமாக நடத்துகிறார்கள். மக்களுக்கு செய்திகளை தெரிவிக்க வேண்டும் என்ற கடமையால் மட்டுமே நாம் அங்கு செல்கிறோம். முதலமைச்சர் சாட்டையை சுழற்றினார், அனைவரையும் மிரட்டினார், ராஜினாமா கடிதங்களை வாங்கிக்கொண்டார், இனி யாரும் தவறு செய்யக்கூடாது என்று எச்சரித்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின்றன.

ராஜினாமா கடிதங்கள்
அச்சு ஊடகங்களில் சுமார் 30 பேரிடம் வெற்றுத் தாள்களை வாங்கி வைத்திருப்பதாகவும், அவற்றை ராஜினாமா கடிதங்களாகப் பயன்படுத்தப் போவதாகவும் செய்திகள் வருகின்றன.
முதலமைச்சர் கடுமையாக எச்சரித்ததால் அனைவரும் பயந்துபோய் தங்களது எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டதாகவும், இந்தப் பிரச்சனைகளுக்கு முடிவுகட்டும் வகையில் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், இவை அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்படும் செய்திகள் என்றே நான் கருதுகிறேன். செய்திகளின் திசையை மாற்றும் முயற்சி இது.
30 எம்எல்ஏக்கள்
இன்றைய சூழலில் ஒரே ஒரு எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்தாலே போதும். அவர் இனிமேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என்று உத்தரவிடலாம். கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் எழுத சொல்லலாம். அவர் மீது விசாரணைக் குழு அமைக்கலாம். கட்சி பதவியை பறிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகளைத் தவெக தலைமை அறிவிக்க முடியும்.
மக்கள் அவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவருடைய கட்சிப் பொறுப்பைப் பறிப்பதற்கு என்ன தடையிருக்கிறது? விஜய்யை வைத்துத்தான் தவெக இயங்க வேண்டுமா? அல்லது கள்ளக்குறிச்சியில் இருக்கும் ஒரே ஒரு எம்எல்ஏவை வைத்துத்தான் கட்சி இயங்க வேண்டுமா?
ஒரு எம்எல்ஏவாக இருக்கிறோம் என்பதற்காக மாவட்ட ஆட்சியருக்கு ஆள் அனுப்பி மிரட்டுவதும், குறுஞ்செய்தி அனுப்புவதும் எந்த வகையில் நியாயம்?
ரவிசங்கர் அருள் விக்னேஷ்
சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திலேயே ஓர் ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார். அவர்களுக்கும் காவல்துறை பற்றியும், நிர்வாக நடைமுறைகள் பற்றியும் தெரியும். இவை அனைத்தும் தெரிந்தும் இப்படிச் செயல்படுகிறார்கள் என்றால், அவர்களிடம் எந்த அளவுக்கு அதிகார மமதை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த குற்றச்சாட்டுகளை யாரும் மறுக்கவில்லை. ஆனால், ரவிசங்கர் விவகாரம், மறுபுறம் அருள் விக்னேஷ் விவகாரம் என்று இந்த இரண்டு விஷயங்கள்தான் தொடர்ந்து பேசப்படுகின்றன.. ரவிசங்கர் விவகாரத்தில் சபாநாயகரும், துணை சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், அது அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பொறுப்பில் இருப்பவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டிய விவகாரம்.
விஜய் பிம்பம் உடையுமா?
பாலியல் சீண்டலா, அடிதடியா என்று ஒப்பிட்டு பார்த்தால், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் என்பது மிகவும் தீவிரமான பிரச்சினை. அதிலும் மாவட்ட ஆட்சியரே சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.. அதனால், இந்த விவகாரத்தை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். தேவையானால் சம்பந்தப்பட்டவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கலாம். குறைந்தபட்சம் வார்னிங் கடிதமாவது தரலாம். விசாரணை நடத்தலாம். முதற்கட்ட நடவடிக்கையாவது எடுக்கலாம்.
இந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், 30 பேரிடம் கடிதம் வாங்கினார், அனைவரையும் மிரட்டினார், ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும் என்று எச்சரித்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின்றன. இந்த ஆட்சியை வெளியிலிருந்து யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. மக்களே வாக்களித்து இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களே அதிருப்தி அடைந்தால் ஆட்சியின் நிலை என்னவாகும்?
இன்றைக்கு விஜய் அவர்களின் அரசியல் பிம்பம்தான் ஆட்சியைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் பிம்பம் எப்போது வேண்டுமானாலும் உடையலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
