நிலத்தை விற்கப் போறீங்களா? 26 ஆண்டு சிக்கல்! களமிறங்கும் வருவாய்த்துறை.. அரசு என்ன செய்ய போகிறது?
சென்னை: பட்டா வாங்கும்போதோ, நிலத்தை விற்க முயற்சி செய்யும்போதோ ஏதாவது ஒரு சிக்கல் வந்தால்தான், நம்முடைய நில ஆவணத்தில் பிழை இருப்பதே பலருக்கும் தெரியவரும்.. அப்படிப்பட்ட பிழைகளை சரிசெய்ய என்ன செய்வது? வருவாய்த் துறை ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பின்னரும் இந்தப் பிரச்சினை ஏன் தொடர்கிறது? இதற்கான நடவடிக்கையில் இப்போதுதான் இறங்கியுள்ளது வருவாய்த் துறை. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!
பட்டாவில் பெயர், சர்வே எண், நிலத்தின் அளவு போன்ற விவரங்களில் பிழை இருந்தால், முதலில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களுடன் திருத்தம் கோரி மனு கொடுக்கலாம்.

பட்டா ஆவணங்களில் பிழை
பழைய பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்து விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். மனு கொடுத்தும் தீர்வு கிடைக்காவிட்டால், மேலதிகாரிகளிடம் முறையிடலாம். ஆனால், இங்கேதான் ஒரு முக்கியமான சிக்கல்.. ஒவ்வொருவரும் தனித்தனியாக மனு கொடுத்து பிழையைச் சரிசெய்ய வேண்டிய நிலை நீடிக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2000-ம் வருடம் முதலே வருவாய்த் துறை ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக உருவாக்கப்படும் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கணினி மூலமாகவே தயாரிக்கப்படுகின்றன. அதேநேரத்தில், பழைய பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் போன்ற ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்குகின்றனர்.
பழைய ஆவணங்கள் - சொத்து விற்பனை
இந்தப் பழைய ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்தபோதுதான் பல இடங்களில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. பெயர், நிலத்தின் விவரங்கள் உள்ளிட்டவற்றில் தவறான பதிவுகள் இருந்தாலும், அவை மக்களின் கவனத்துக்கு உடனடியாக வருவதில்லை. சொத்தை விற்கும்போதோ, வேறு ஒருவருக்கு மாற்றும்போதோ தான் இந்தப் பிரச்சினை வெளியே வருகிறது.
இதனால் நிலத்தை விற்பனை செய்வது, கட்டடம் கட்ட அனுமதி பெறுவது போன்ற முக்கியமான வேலைகள் பாதிக்கப்படுகின்றன. ஆவணங்களில் உள்ள பிழையைச் சரிசெய்யாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதற்காக மக்கள் தனித்தனியாக மனு கொடுத்து அலைய வேண்டியுள்ளது.
26 வருடங்களுக்கு பிறகு தீர்வு
இந்த பிரச்சினை கடந்த 26 வருடங்களாக தொடர்ந்தாலும், இதற்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படை வழிமுறைகளை வருவாய்த் துறை இப்போதுதான் ஆராய தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்களில் பிழைகள் இருப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையின் நில நிர்வாகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலம் முழுவதும் இந்தப் பிரச்சினை இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். தாலுகா வாரியாக முகாம்கள் நடத்தி பிழைகளைச் சரிசெய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நிலம்- வருவாய்த்துறை
குறிப்பாக, தங்கள் நிலம் தொடர்பான விவரங்கள் கணினியில் தவறாக பதிவாகியிருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எனவே, பொதுமக்களையும் பங்கேற்கச் செய்து, ஆவணங்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துத் திருத்த வேண்டும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதற்காக மாவட்ட ஆட்சியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் வருவாய்த் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி முகாம்கள் நடத்தப்பட்டால், பல வருடங்களாக ஆவணப் பிழையால் சிரமப்படும் மக்களுக்கு நிம்மதி கிடைக்குமா என்பதுதான் இப்போது எதிர்பார்ப்பாக உள்ளது.,,!!!


Click it and Unblock the Notifications
