“திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு சிறுபான்மையினரின் நம்பிக்கையை தகர்த்துள்ளது”.. ஜவாஹிருல்லா கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. பாபர் பள்ளிவாசலின் வழக்கின் தீர்ப்பு ஏற்படுத்திய அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகிறது" என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்திருந்தது. இதற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Jawahirullah

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் நவம்பர் 24ல் ஒரு முறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகிலுள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுகளின் மீதான அம்சங்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதே சர்ச்சைக்குரிய இடத்தில் நவம்பர் 24 அன்று ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருப்பது ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, இந்தக் கல் தூண் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடம்தானா? அது வழிபாட்டுக்குரிய தீபத்தூணா அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நில அளவைத் தூணா? அந்த இடம் யாருக்குச் சொந்தமானது? அங்கு தீபம் ஏற்றுவதற்கு நிறுவப்பட்ட மத வழக்காறு ஏதேனும் உள்ளதா? போன்ற அடிப்படையான சட்ட, வரலாற்று மற்றும் சொத்துரிமை சார்ந்த கேள்விகளுக்கு இன்னும் இறுதியான விடை காணப்படவில்லை.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான கண்டறிதல்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டு, அதே சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடான அணுகுமுறையாகவே தோன்றுகிறது.

இந்த அனுமதி ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்றும், இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் உரிமை கோருவதற்கான முன்னுதாரணமாகவோ, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மத வழக்காற்றுக்கான ஆதாரமாகவோ பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தைத் தாண்டி, நடைமுறையில் ஒரு சர்ச்சைக்குரிய மத நடவடிக்கைக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இதேபோன்ற கோரிக்கைகள் எழுவதற்கும் புதிய சர்ச்சைகள் உருவாவதற்கும் வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இந்தத் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு அயோத்தி பாபர் பள்ளிவாசல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் நினைவூட்டுகிறது. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான செயல் என்றும், முஸ்லிம்கள் தங்களுடைய வழிபாட்டிடத்தை இழந்தது தவறு என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்தது. ஆனால், இறுதியில் சர்ச்சைக்குரிய இடம் ராமர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்கப்பட்டது.

நீதிமன்றம் ஒரு தரப்பின் உரிமை மீறலை ஒப்புக்கொண்டாலும், நடைமுறையில் இறுதி முடிவு அந்தத் தரப்புக்குச் சாதகமாக அமையாத போது, நீதியின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையில் ஏற்படும் பாதிப்பை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாபர் பள்ளிவாசல் வழக்கும் திருப்பரங்குன்றம் வழக்கும் சட்டரீதியாக ஒன்றல்ல என்ற போதிலும், இத்தகைய இடைக்கால ஏற்பாடுகள் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலை நியாயமானது.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26ஆவது பிரிவுகள் வழங்கும் மதச் சுதந்திரம், மத நிறுவனங்களின் உரிமைகள், வழிபாட்டிடங்களின் சொத்துரிமை ஆகியவை எந்தவொரு மதத்திற்கும் பாரபட்சமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் தர்கா மற்றும் பள்ளிவாசலின் வழிபாட்டு உரிமைகளும் அமைதியான செயல்பாடுகளும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது முக்கியமானது.

தமிழ்நாட்டின் பல்லாண்டுகால மதநல்லிணக்க மரபையும், திருப்பரங்குன்றம் மலையின் பன்மத வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் நீதித்துறைக்கும் உள்ளது. ஒரு மதத்தினரின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொண்டு மற்றொரு மதத்தினரின் உரிமைகளில் தலையிடும் நிலை உருவாகக் கூடாது.

எனவே, நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள ஒருமுறை அனுமதி, எதிர்காலத்தில் எந்தவொரு புதிய உரிமைக் கோரிக்கைக்கும் அடிப்படையாக மாறிவிடாத வகையில் உச்சநீதிமன்றம் தனது இறுதி விசாரணையில் தெளிவான சட்டப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.

மத உரிமைகள் என்பது பெரும்பான்மையின் விருப்பத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்ல; அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் பாரபட்சமின்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. நீதியின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே உண்மையான அரசமைப்புச் சட்டக் கடமையாகும். இன்றைய தீர்ப்பு அந்த நம்பிக்கையை தகர்த்திருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+