#Exclusive எஸ்பிஜி பற்றி தெரிஞ்ச யாராவது இப்படி? "அண்ணாமலை மலிவு அரசியல்" பத்திரிகையாளர் மணி விளாசல்
சென்னை : பிரதமர் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர் செயல்படாமல் இருந்ததாகவும், பிரதமர் பாதுகாப்பிலேயே தமிழக அரசு அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அண்ணாமலை செய்வது மலிவான அரசியல் என 'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்திருந்தபோது, மாநில காவல்துறை பாதுகாப்பில் குளறுபடி எனக் குற்றம்சாட்டி, ஆளுநரிடம் புகார் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும் எஸ்.பி.ஜி பற்றிய குறைந்தபட்ச புரிதல் உள்ள யாரும் இப்படியொரு குற்றச்சாட்டை வைக்க மாட்டார்கள் என சரமாரியாக விளாசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
நான் ராவணனா? கார்கேவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி.. ஒரேபோடு.. அனல் பறந்த குஜராத் பிரசாரம்

அண்ணாமலை பகீர்
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி நேரு விளையாட்டரங்கில் நடந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடி வந்திருந்த போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருந்ததாகவும், பிரதமர் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் மற்றும் பிற மெட்டல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும், இந்த விஷயம் மத்திய புலனாய்வு ஏஜென்சி மூலம் தற்போது தெரியவந்துள்ளது என்றும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாநில அரசின் பொறுப்பாளர்கள் மீது ஆளுநர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து பகீர் கிளப்பினார்.

பெரும் பரபரப்பு
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் ஒரே முக்கிய வேலை பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது தான். பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி என்றால் அவர்கள் சரியாக வேலை செய்யவில்லையா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிரதமர் மோடி வந்து சென்ற நான்கு மாதங்கள் கழித்து பாதுகாப்பு குளறுபடி பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அண்ணாமலையின் குற்றச்சாட்டு பற்றி விளக்கம் அளித்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்த ஒரு அரசு துறையும் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரவில்லை எனத் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் மணி
இந்த விவகாரம் குறித்து 'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், "பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் SPG பற்றி குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் இப்படியான குற்றச்சாட்டை முன்னெடுக்க மாட்டார்கள். பிரதமர் இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பிரதமரின் பாதுகாப்புக்காக தனியாக ஒரு படை உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தால் உருவாக்கப்பட்ட படை என்பதால் SPG தன்னிச்சையாக செயல்படக்கூடிய அதிகாரங்கள் கொண்டது. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்கள் பாதுகாப்பு படையினர் என்பதாலேயே யாரையும் நம்பாமல் பிரத்யேகமாக எஸ்.பி.ஜி உருவாக்கப்பட்டது.

எஸ்.பி.ஜி அதிகாரம்
ஒரு இடத்துக்கு பிரதமர் வருகிறார் என்றால் 10 நாட்களுக்கு முன்பே எஸ்.பி.ஜி படையினர் ஆய்வு செய்துவிட்டுச் செல்வார்கள். பாதுகாப்பு சோதனைகள் நடைபெறும். மாநில காவல்துறையினர் மெடல் டிடெக்டர் போன்ற கருவிகளை அவர்களுக்கு அளித்தாலும் கூட, அதுவும் கூட எஸ்.பி.ஜியின் அதிகார வரம்புக்கு உட்பட்டதே. இப்போது அண்ணாமலை, செயல்படாத மெட்டல் டிடெக்டர்கள் அப்போது இருந்ததாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார். அது சரிவர செயல்படவில்லை என்பதை எதை வைத்து மதிப்பீடு செய்கிறார்கள் என்பதும் முக்கியம். பிரதமர் பாதுகாப்புக்கு என வைத்திருக்கும் அளவீடுகளுக்கு அதன் செயல்தன்மை குறைவானதாக இருந்திருக்கலாம். ஆனால், முற்றிலும் செயல்படாத ஒன்றை வைத்திருக்க வாய்ப்பில்லை.

பேனை பெருமாள் ஆக்கி
சி.ஏ.ஜி அறிக்கைகளில் பொதுவாக, காவல்துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பற்றிய குறைகள் கூறப்படுவது வழக்கம். பிரதமர் பாதுகாப்பை பொறுத்தவரை எஸ்.பி.ஜியின் முழு கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அப்படி உண்மையிலேயே இது சீரியஸான விஷயம் என்றால் 4 மாதங்களுக்குப் பிறகு இந்த பிரச்சனையைக் கிளப்ப வேண்டிய அவசியம் என்ன? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு மாநில அரசு மீது சுமத்தப்படுகிறது என்றால், இது உடனே அண்ணாமலைக்கு தெரியவந்திருக்கும். அதற்குரிய இடத்தில் அவர் இருக்கிறார். தமிழக அரசுக்கு எதிராக பாஜக எப்படி, சிறு துரும்பையும் பெரிதாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அற்ப அரசியல்
அப்படி இருக்கும்போது, பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி என்றால், இவ்வளவு தாதமமாகவா குற்றம்சாட்டும்? பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி என்பது ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் கையில் எடுத்து அற்ப அரசியல் செய்யும் விஷயம் கிடையாது. எந்த மாநில அரசும் இதில் அஜாக்கிரதையாக செயல்படாது. பாதுகாப்பு குளறுபடி என்றால், அன்றைக்கே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்திருப்பார்கள். ரெட் ஃபிளாக் போட்டு மாநில அரசு மீது மத்திய அரசு கேள்வி எழுப்பியிருக்கும். ஆனால், அது எதுவும் நடக்கவில்லை.

பிரதமர் மீண்டும் வந்தாரே
போதாக்குறைக்கு, சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு, சாலை மார்க்கமான பயணத்தின்போதே தமிழக காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. முன்பு அப்படி ஒரு பாதுகாப்பு குளறுபடி நடந்திருந்தது என்றால், இதை எப்படி மத்திய அரசும், எஸ்.பி.ஜியும் அனுமதிக்கும்? ஏற்கனவே நாம் ஒரு பிரதமரையும், முன்னாள் பிரதமரையும் படுகொலைக்கு பலி கொடுத்திருக்கிறோம். எனவே பிரதமரின் பாதுகாப்பு என்பது அரசுகளின் உச்சபட்ச கடமை. அப்படி இருக்கும்போது ஒரு மாநில காவல்துறை எப்படி அஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கும்?

சீப் பாலிடிக்ஸ்
மெட்டல் டிடெக்டர் சரியாகச் செயல்படவில்லை என்றால், எந்த அளவுக்கு? மத்திய அரசின் விதிமுறைகள் என்ன? அண்ணாமலையின் அரசியல் மலிவானதாக இருக்கிறது. பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி என்றால் பிரதமர் அலுவலகம் அந்தப் பிரச்சனையை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சியின் மாநில தலைவர் இதைப் பேசுகிறார் என்றால் இது அப்பட்டமான அற்ப அரசியல். பிரதமரின் பாதுகாப்பிலேயே 'சீப் பாலிடிக்ஸ்' செய்கிறார் அண்ணாமலை. பிரதமருக்கான பாதுகாப்பிற்கு அப்போது அண்ணாமலையே நன்றி தெரிவித்துப் பேசினார். அதன்பிறகும் மோடி மீண்டும் தமிழகம் வந்துவிட்டுச் சென்றுவிட்டார். எனவே, அண்ணாமலையின் குற்றச்சாட்டு அபத்தமானது.

குறைந்தபட்ச அறிவு இருந்தால்
திமுக அரசை சீர்குலைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வரும் பாஜகவின் அண்ணாமலை, பிரதமரின் பாதுகாப்பையும் அற்ப அரசியலாக மாற்றி இருப்பது கேவலமானது. அதுவும் 4 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பிரச்சனையை கிளப்பி இருப்பது மோசமானது. அரசியல் அனுகூலத்திற்காக எந்த எல்லைக்கும் இவர்கள் செல்வார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. மாநில காவல்துறையின் மெட்டல் டிடெக்டர்களை எஸ்.பி.ஜி முன்கூட்டியே பரிசோதிக்கும், அப்படி என்றால் அண்ணாமலை எஸ்பிஜியை தான் குற்றம்சாட்ட வேண்டும். எஸ்.பி.ஜி பற்றி குறைந்தபட்ச அறிவைக் கொண்டவர்கள் கூட, அண்ணாமலையின் குற்றச்சாட்டை எள்ளி நகையாடுவார்கள்.

ஐபிஎஸ் அதிகாரிக்கு
ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு இதெல்லாம் தெரியாதா? இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தால் உள்துறை அமைச்சர், ஆளுநர் எல்லாம் சும்மா இருந்திருப்பார்களா? விசாரணை கமிஷன் அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பிரதமர் பாதுகாப்பில் சமரசத்திற்கே இடமில்லை. அதற்கு யாரும் குறுக்கே நிற்க முடியாது. அப்படி இருந்தும், இத்தனை மாத காலம் கழித்து இந்தப் பிரச்சனையை அண்ணாமலை கொண்டு வருவதே அப்பட்டமான மலிவு அரசியல்" எனத் தெரிவித்துள்ளார்.