‘மது ஒழிப்பு’ மாநாடா? கூட்டணி மாற ஏற்பாடா? 96இல் பாமகவுக்கு வந்த நிலை.. விழித்துக் கொள்ளுமா விசிக?..

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிகவில் உள்ள இளம் தலைவர்கள் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவதால் கூட்டணிக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை திருமா உடனடியாக தடுக்காவிட்டால் அவரது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் எச்சரித்துள்ளார்.

திமுக கூட்டணியில் பலமான கட்சியாக விசிக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணிக்குள் வந்த பிறகுதான் 4 எம்.எல்.ஏக்களையும் 2 எம்பிக்களையும் விசிக பெற்று கட்சிக்கான அங்கீகாரத்தை வாங்கி இருக்கிறது. விசிக வளர்ச்சிக்கு ஒரு மறைமுக காரணமாக திமுக இருந்துள்ளது. திமுக ஆட்சிக்கு விசிகவும் ஒரு பங்கை அளித்துள்ளது. இது கிவ் அண்ட் டேக் பாலிசி. யார் பெரியவர் எனப் பார்த்தால் கூட்டணி வைக்க முடியாது. ஆட்சியைப் பிடிக்க முடியாது. அதுவே கூட்டணி தர்மம். ஆனால், விசிக கடந்த 2024 மக்களவைத் தேர்தல் தொடங்கியதிலிருந்து திமுகவுக்கு ஒரு நெருக்கடியை அளித்து வருகிறது. பொதுத் தொகுதியைக் கேட்டார்கள். 3 எம்பி தொகுதிகளைக் கேட்டார்கள். அதனால் கூட்டணிக்குள் விரிசல் வரலாம் என ஊடகங்கள் எடுத்துப் பேசின. ஆனால், இறுதியில் 2 தொகுதிகள் என்பதை ஏற்றுக் கொண்டு அமைதியானார் திருமா.

dmk vck

இப்போது மீண்டும் கூட்டணிக்குள் ஒரு குழப்பத்தை மது ஒழிப்பு மாநாடு மூலம் ஏற்படுத்தி இருக்கிறார். இது திமுகவுக்கு மறைமுகமாக நெருக்கடி தரும் என முதலில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவுக்கு திருமா அழைப்பு விடுத்தார். அது சங்கடத்தை அளித்தது. முதல்வரைச் சந்தித்த பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்கு விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன், '4 ஆண்டுகள் முன்னால் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர் துணை முதல்வராகலாம். 40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் திருமாவளவன் துணை முதல்வராகக் கூடாதா?' என்று உதயநிதியை டார்கெட் செய்து அளித்த பேட்டி அனலைக் கிளப்பி இருக்கிறது.

இதனால் என்ன ஆகும்? இந்தநிலை தொடர்ந்து நீடித்தால் விசிக கூட்டணிக்குள் இருக்குமா? என பல கேள்விகளுக்கு தனது கடந்த கால அனுபவங்களைக் கொண்டு ஒரு விளக்கம் அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அவர் பேசுகையில், "திருமாவளவன் என்ன கோரிக்கை வைத்தாலும் மாநாடு நடத்தினாலும் அவர்களால் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஏதேனும் பெரிய கட்சியின் கூட்டணி இருந்தால்தான் அது முடியும்.

யார் அந்தப் பெரிய கட்சிகள்? திமுக அல்லது அதிமுக. இப்போதைக்கும் திமுக கூட்டணியில் விசிக இருக்கிறது. திமுகவுக்கு முரண்பாடான கருத்துகளை விசிகவில் உள்ள இளைஞரணி தலைவர்கள் பேசி வருகிறார்கள். மூத்த தலைவர்கள் அப்படி ஒன்றும் இல்லை என்று மறுக்கிறார்கள். இது எந்த வகையிலும் விசிக மாநாட்டிற்கு வலுசேர்க்காது. திமுகவைச் சார்ந்த அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் போனால் மாநாடு பிசுபிசுத்துப் போய்விடும். காவல்துறையை வைத்து வாகனங்களை மடங்கினால் கூட்டம் வராமல் போய்விடும். அது தோல்வியில் கொண்டுபோய் விடும்.

எனவே திருமா எடுத்துள்ள வழி என்பது ஒரு முட்டுச்சந்தாகவே தெரிகிறது. இன்றைய காலத்தில் மது ஒழிப்பு என்பது உலக அளவில் சாத்தியம் இல்லாத ஒன்று. கர்நாடகத்தில் அல்லது தமிழ்நாட்டில் மது ஒழிப்பு கொண்டு வந்தால் இங்குள்ள ஐடி துறை சுத்தமாகப் படுத்துவிடும். அதை தாண்டி ஒவ்வொரு கிராமத்தில் நடக்கும் அனைத்து விருந்துகளும் மது இல்லாமல் நடப்பது இல்லை. இந்திய அளவில் மது விலக்கைக் கொண்டுவர வேண்டும் என திருமா வலியுறுத்துகிறார். அது சாத்தியமற்றது. நடக்காத காரியம். மாநாடு முன்வைக்கும் முதல் விசயமே தோல்வியில்தான் முடிந்துள்ளது.

நாம் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தோம். மக்களிடம் அதைப் பற்றி விழிப்புணர்வை வளர்த்தோம். புரியவைத்தோம். இன்று வீட்டுக்கு ஒரு வாரிசு என்ற நிலை வந்துவிட்டது. கட்டாயப்படுத்தி இருந்தால் அது நடந்திருக்காது. சீனாவில் மசேதுங் காலத்தில் குழந்தைப் பெற்றுக்கொள்ளக் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்தார்கள். அதனால் சீன பொருளாதாரமே நசிந்து போனது. இதைப் போன்றுதான் மது ஒழிப்பும். அதைப் பற்றி விழிப்புணர்வைக் கொண்டு வரலாம். அதை ஒழிக்க முடியாது. இதுதான் என் 40 ஆண்டுகால அனுபவத்தில் பார்த்தது. முதலில் 2 வருடம் தடைபடுத்துவார்கள். திரும்ப ஆரம்பிப்பார்கள். ஒரு படத்தில் நீங்க குடிக்கச் சொன்னால் நாங்கள் குடிக்க வேண்டும். நீங்கள் குடிக்க வேண்டாம் என்றால் நாங்கள் குடிக்கக் கூடாதா? என்று ஒரு வசனம் கூட வரும். இதைப் போய் ஒரு கொள்கை முழக்கமாக விசிக ஏன் எடுத்தது என்பதே குழப்பமாக உள்ளது. விசிகவுக்குள் இதைப் பற்றி இரு வேறு கருத்துகள் உள்ளதாகவே உணர முடிகிறது. விசிகவில் உள்ள ஆதவ் அர்ஜுன் ஒரு பேட்டிக் கொடுத்துள்ளார். திமுகவின் தேர்தல் வியூகக் குழுவிலேயே நான் பணியாற்றி இருக்கிறேன். சீட்டு வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்போதோ வாங்கி இருப்பேன். எம்பி சீட்டு எனக்கு முக்கியமே இல்லை என்கிறார். உதயநிதியைக் குறி வைத்து ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார். அதுவே திமுக கூட்டணிக்கு விரிசலை உண்டாக்கும்.

இவர் சொல்வதைப் போல உதயநிதி 4 வருடத்தில் வரவில்லை. அவர் ஜெயலலிதா இருந்தபோதே இளைஞரணியில் இருக்கிறார். தேர்தல்களில் பங்கேற்று கட்சியின் வெற்றிக்குப் பங்களிப்பை செய்துள்ளார். அவரை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த முறை 6 சீட்டு வாங்கி 4 தொகுதிகளில் விசிக வென்றது. இந்த முறை அதையேதான் தருவார்கள். இந்த முறை குறைக்கவும் செய்யலாம். ஒருவேளை அதிமுகவுக்குப் போகலாம். ஆனால், கூட்டணி ஆட்சி என்ற கான்செப்ட்க்குள் நாங்கள் வரவே இல்லை என்கிறார் செல்லூர் ராஜு.

சொல்லப் போனால் பாமக நீண்ட காலம் திமுக கூட்டணியில்தான் இருந்தது. வழப்பாடி ராமமூர்த்தி திமுக கூட்டணியில்தான் ரொம்ப காலம் இருந்தார். 96இல் தாமாக வந்ததால் கூட்டணிக்கு பலம் என்று கருணாநிதி ஒரு முடிவை எடுத்தார். அப்போது பத்திரிகையாளர்கள் 'பாமக கூட்டணியில் தொடர்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'பாமக எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை இன்னும் சொல்லவே இல்லை' என்று பதிலளித்தார்.

உடனே ராமதாஸ் எத்தனை தொகுதிகள் தேவை என்பதை ஊகத்தைச் சந்தித்துச் சொன்னார். அதற்கு, 'நண்பர்களாக வந்தார்கள். நண்பர்களாகவே செல்லட்டும்' என்று ராமதாசை கழற்றிவிட்டுவிட்டார். திண்டிவனம் ராம மூர்த்தியையும் அப்படித்தான் கழற்றிவிட்டார். இந்த இருவரும் பல ஆண்டுகளாக ஜெயலலிதா எதிர்ப்பை கடைப்பிடித்துவந்தார்கள். இறுதியில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெற முடியாமல் தனி அணி அமைத்தார்கள். அர்ஜுன் சிங்கின் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டிப் போட்டார்கள். பாமக இந்தச் சின்ன கூட்டணியில் இடம்பெற்று 4 தொகுதிகளில் வெற்றிபெற்று பலத்தை நிரூபித்தது.

இப்படி கூட்டணிக்குள் இருந்து நெருக்கடியைத் தருவதால்தான் ஒரு கட்டத்தில் தனித்து போட்டி என அறிவித்தார் ஜெயலலிதா. இறுதியில் வேண்டுமானால் இரட்டை இலையில் போட்டியிடுங்கள் என அழைத்தார். இவை எல்லாம் கடந்த கால அனுபவங்கள். இதை எல்லாம் திருமாவளவன் உணர்ந்தவர்தான். எனவே இப்படி பேட்டி தருபவர்களை அவர் கண்டித்து வைக்க வேண்டும். இதைப் போன்று மது ஒழிப்பு மாநாட்டில் சிலர் பேசினால் என்ன ஆகும்? அதைக் கண்டிக்க வேண்டிய நிலை வரும். அது கூட்டணிக்குச் சிக்கலைத் தரும்.

திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி ஒரு முடிவை அறிவித்துவிட்டார். அதன்பின்னர் ஆதவ் அர்ஜுன் இப்படி ஒரு பேட்டி தருகிறார். 2017இல் முரசொலி பவள விழா. அதில், 'மத்தியில் நடப்பது மோடி ஆட்சியல்ல. மோசடி ஆட்சி' என்று ஸ்டாலின் பேசினார். அதைத் தடுக்க திருமா உடன் நிற்பார் என்று பாராட்டிப் பேசினார். 2016வரை விசிக வேறு கூட்டணி. 2019இல் திமுக கூட்டணிக்கு திருமா வந்தார். 7 ஆண்டுகளாகக் கூட்டணியில் உள்ளார். இப்படித் தொடர்ந்து விசிகவினர் பேசினார் என்ன ஆகும்? திமுக தானாகக் கூட்டணியை முறிக்காது. கவனித்துக் கொண்டே வருவார்கள். வாய்ப்பு உள்ள போது விலக்கிப் போக விட்டு விடுவார்கள்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+