"வெள்ளி விலை 90% சரிஞ்சு இருக்கு.." ஆதாரத்தோடு வந்த ஆனந்த் சீனிவாசன்.. இப்படி கூட நடக்குமா என்ன!
சென்னை: தங்கம் விலை எங்கோ எட்டாத தூரத்திற்குப் போய்விட்ட நிலையில், மக்கள் பலரும் வெள்ளி பக்கம் திரும்பியுள்ளனர். வெள்ளியில் முதலீடு செய்தால் இதுபோல ஒரு நல்ல லாபத்தைப் பார்க்கலாம் என நினைத்து மக்கள் பலரும் வெள்ளியை வாங்கி வருகிறார்கள். ஆனால், இதில் ஒரு முக்கிய சிக்கல் இருப்பதாக எச்சரிக்கிறார் ஆனந்த் சீனிவாசன். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த சில காலமாகவே தங்கத்தை விட வேகமாக வெள்ளி பறந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி ரூ.136ஆக இருந்த வெள்ளி, ஒரே மாதத்தில் 40% வரை அதிகரித்தது. தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்குப் பற்றாக்குறை இருக்கும் அளவுக்குப் போய்விட்டது..

வெள்ளி விலை
நேற்று கூட சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206க்கு, அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.2.06 லட்சத்திற்கு விற்பனையானது. இருப்பினும், வெள்ளி முதலீட்டில் பிரச்சனை இருப்பதாகச் சொல்கிறார் ஆனந்த் சீனிவாசன். இதனால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்வீர்கள். அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்.. வெள்ளி விலை தொடர்பாக இதைத் தான் சொல்ல முடியும். அமெரிக்காவில் 1979ம் ஆண்டு ஒரு அவுன்ஸ் வெள்ளி 6.5 டாலர் இருந்தது. இப்போது நடந்தது போல அப்போது பலரும் வெள்ளி வாங்கினார்கள்.
90% சரிஞ்சு இருக்கு
அப்போது ஹண்ட்ர் சகோதரர்கள் உலக மார்கெட்டில் இருக்கும் அனைத்து வெள்ளியையும் வாங்க முயன்றனர். இதனால் 1980ல் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 49.50 டாலருக்கு கொண்டு சென்றனர். அதுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உச்சமாக இருந்தது. திடீரென ஒரு சமயம் மார்கெட் விழ ஆரம்பித்தது. திரும்ப 4.5 டாலர் வரை சரிந்தது. அதாவது 90% வரை சரிந்தது. 45 ஆண்டுகள் கழித்து இப்போது தான் அந்த ரேட்டை தாண்டியுள்ளது.
சிலர் ஒரு மாதத்தில் 37% உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது முன்பு ஒரே ஆண்டில் 90% வரை ஏறி, அதே வேகத்தில் 90% வரை சரிந்தது இருக்கிறது. அதாவது 6 டாலரில் இருந்து 50 டாலருக்கு போன வெள்ளி, மீண்டும் 5 டாலருக்கு சரிந்தது. 90% பெரிசா 37% பெரிசா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதே போல நடந்தால் என்னவாகும்? ரூ.35க்கு கூட போகலாம் தானே.. இதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்கிறேன்.
காரணம் என்ன
1980களில் வெள்ளி வெறும் 1.5 ஆண்டுகளில் முன்பு சொன்னது போல 90% வரை சரிந்தது. இதற்குக் காரணமே வெள்ளி என்பது ஒரு கரன்சி இல்லை... அதேநேரம் தங்கம் ஒரு கரன்சி தான். நமக்கு எது லெக் ஸ்பீன், எது கூக்ளி எனத் தெரிய வேண்டும்.. மாறி விளையாடினால் அவுட் தான் ஆக வேண்டும். சும்மா சமூக வலைத்தளத்தில் இருப்பதைப் பார்த்துப் பயக்கத் தேவையில்லை.
ஒரே பிரச்சனை
இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளியை வாங்காது.. சீன மத்திய வங்கி வெள்ளியை வாங்காது.. உலகின் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியும் வெள்ளியை ரிசர்வ் கரன்சியாக வாங்கி வைப்பதில்லை. அப்போது வெள்ளி விலை சரிய ஆரம்பித்தால் அதை தடுக்கவே முடியாது. வெள்ளி விலை சரிந்தால் நிறுத்த ஆள் இல்லை. தங்கம் சரிந்தால் சீனா, ரஷ்யா, அவ்வளவே ஏன் இந்திய ரிசர்வ் வங்கி கூட உள்ளே புகுந்து வாங்கும். எனவே, ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் சரியாது. ஆனால், வெள்ளியை அப்படி வாங்க ஆள் இல்லை.
மார்கெட்டை காக்கக் கடைசியாக வாங்குபவர் (buyer of last resort) என்று ஒன்று இருக்கும். தங்கத்திற்கு எப்போதும் மத்திய வங்கிகள் தான்! வெள்ளிக்கு யார் இதுபோல வாங்குவார்கள். அதுவே வெள்ளியில் இருக்கும் ஒரே பிரச்சனை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வெள்ளி விலை சரிய ஆரம்பித்தால் அதை தடுக்க ஆள் இல்லை" என்று அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications