"அதே ஸ்கிரிப்ட், அதே நம்பிக்கை" 2011 உலகக்கோப்பை நியாபகமிருக்கா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
சென்னை: 2011ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை போலவே நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெற்று வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை அளித்துள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓரியோ பிஸ்கெட்டை வெளியிட்டு, மீண்டும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு 2011ம் ஆண்டு ஓரியோ பிஸ்கெட் வெளியிட்ட போது இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. தற்போது 2022ம் ஆண்டு மீண்டும் ஓரியோ பிஸ்கெட் வெளியிட்டுள்ளதால், மீண்டும் உலகக்கோப்பையை வெல்லும் என்ற புதிய விளக்கத்தையும் கொடுத்தார்.

இங்கிலாந்து - அயர்லாந்து
அப்போது இது விளம்பர தந்திரம் என்று விமர்சிக்கப்பட்டாலும், டி20 உலகக்கோப்பையில் நடந்து வரும் சம்பவங்கள் அனைத்து 2011ம் ஆண்டை மீண்டும் நினைவுபடுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் எப்படி இங்கிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்ததோ, அதேபோல் நடப்பு டி20 உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா - இந்தியா
அதேபோல் 2011ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் குரூப் சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அதேபோல் நடப்பு டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2011ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இடம்பெற்ற பிரிவில் இருந்த இங்கிலாந்து அணி, சிறிய அணியான வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.

வங்கதேசம் - இந்தியா
தற்போது இந்திய அணி இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, சிறிய அணியான ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை சந்தித்து அரையிறுதி வாய்ப்புக்கு திணறி வருகிறது. அதேபோல் 2011ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சேவாக் சிறப்பாக செயல்பட்டதை போல், நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இறுதிப்போட்டி?
இதுமட்டுமல்லாமல் 2011ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தோனி கடைசி போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடி இருப்பார். அதேபோல் ரோஹித் ஷர்மா நெதர்லாந்து அணிக்கு எதிராக பல வாய்ப்புகள் கிடைத்ததால் அரைசதம் கடந்துள்ளார். இதனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடுவார் என்று ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் நம்பிக்கை
இதேபோல் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. இதனால் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் எப்படி இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பாரோ, அதேபோல் நடப்பு தொடரில் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டு பல்வேறு ஆச்சரியங்களை அளித்தாலும், 2011ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை போலவே 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.