வீட்டு மாடியில் சோலார் பேனல்.. ரூ.1 லட்சம் வரை மானியம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை: வீட்டில் கரண்ட் பில்லை குறைக்க ஒரு வழி இருக்கிறது.. வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல்களைப் பொருத்தி, நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துப் பயன்படுத்தலாம். இதற்காகத்தான் மத்திய அரசு பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் சோலார் பேனல்களைப் பொருத்த அரசு மானியமும் வழங்குகிறது. அப்படியானால், யாருக்கெல்லாம் இந்த மானியம் கிடைக்கும்? எவ்வளவு பணம் கிடைக்கும்? தாம்பரம் மின்வாரியம் இதுகுறித்து என்ன சொல்கிறது?
சோலார் பேனல் திட்டம் என்பது, வீடுகளின் மொட்டை மாடியில் சூரிய மின்தகடுகளைப் பொருத்தி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதாகும்.. பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் கடந்த 2024 பிப்ரவரி 29-ம் தேதி தொடங்கப்பட்டது.

சோலார் பேனல் திட்டம்
இதனால் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மாதந்தோறும் கரண்ட பில்லை கணிசமாக குறைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக வீட்டில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். சோலார் அமைப்பின் திறன், வீட்டின் மின்சாரத் தேவை போன்றவற்றை பொறுத்து கிடைக்கும் பலன் மாறுபடும்.
நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்தி மின்சாரம் தயாரிப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1 கிலோவாட் சூரிய மின்திறனுக்கு ரூ.35,000, 2 கிலோவாட்டுக்கு ரூ.70,000, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மத்திய, மாநில அரசுகள் சார்பில் மானியம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் சூரிய மின்தகடுகள்
இந்தத் திட்டத்தில் வீடுகளில் பொருத்தப்படும் சூரிய மின்தகடுகளின் திறனைப் பொறுத்து மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 1 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு மத்திய அரசு ரூ.30,000, தமிழக அரசு ரூ.5,000 என மொத்தம் ரூ.35,000 மானியம் கிடைக்கும்.
2 கிலோவாட் அமைப்புக்கு மத்திய அரசு ரூ.60,000, தமிழக அரசு ரூ.10,000 என மொத்தம் ரூ.70,000 வழங்கப்படும். அதேபோல், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட சோலார் அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.78,000, தமிழக அரசு ரூ.22,000 என மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
தாம்பரத்தில் விழிப்புணர்வு முகாம்
இந்த திட்டம் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தாம்பரம் கோட்டம் சார்பில், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் தாம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, வீடுகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் மானிய விவரங்களை விளக்கினர்.
மானியத்தை எப்படிப் பெறுவது
சூரிய மின்தகடுகளைப் பொருத்தும் பணி முடிந்த பிறகு, 7 முதல் 30 நாட்களுக்குள் மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 2027 மார்ச் 31-ம் தேதி வரை பதிவு செய்யப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். பொதுமக்கள் www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். திட்டம் குறித்த சந்தேகங்கள் இருந்தால், இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களில் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.




Click it and Unblock the Notifications
