தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்!
சென்னை: தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் (பதிவு எண்கள் IND-TN-10-MM-407, IND-TN-08-MM-214 and IND-TN-16-MM-2046) மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீனவர்ககளின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திடவும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை மீண்டும் இத்தருணத்தில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications