ஜூன் 4ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம்.. கலைஞர் நூற்றாண்டை இந்திய அளவில் கொண்டாடுவோம் - ஸ்டாலின் உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணியின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம் என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். தமிழ் உள்ளவரை தலைவர் கலைஞர் புகழ் ஓங்கட்டும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மடல்.

Stalin says that Let s dedicate the victory of India bloc to Karunanidhi

நம் இதயத் துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞர் போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது. இந்திய வரைபடத்தில் தேடவேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக் களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். நமது கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நிரந்தர ஓய்வுகொள்ளும் சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.

அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அன்றாடம் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. திருத்தலங்கள் பல நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ்நாட்டு மக்களின் புதிய திருத்தலமாகத் திருவாரூர் கலைஞர் கோட்டம் அமைந்துள்ளது.

இவற்றை உருவாக்குவதில் உங்களில் ஒருவனான நான் செலுத்திய கவனத்தையும் அக்கறையும் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் அறிவீர்கள். கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் என்னுடன் போட்டி போட்டுக்கொண்டு கழகத்தின் கடைசித் தொண்டன் வரை கலைஞரின் நூற்றாண்டில் தன் பங்களிப்பைச் செலுத்தியதுதான் வேறெந்த தலைவருக்கும் அமையாத வகையில் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுக்கு அமைந்த சிறப்பு.

2023 மார்ச் 22-ஆம் நாள் நடந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் கொண்டாடுவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற அரசியல் இலக்கணத்தை வகுத்துத் தந்து, ஆட்சிநெறியை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். அதனால், அவருடைய நூற்றாண்டு என்பது சொல்லாகத் தமிழ்நாடு தழுவிய பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என நடத்தப்படுகின்ற அதே நேரத்தில், செயல் வடிவிலும் பல நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று 2023 மே 28 அன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னிறுத்தி, மே 29 அன்று எழுதிய உங்களில் ஒருவன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

ஜூன் 3, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாள். அன்றைய தினம் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று நேற்று காலையில் (மே 28) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி, கிளைகள்தோறும் நடத்தப்பட வேண்டும்.

ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களிள் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றைப் பதியச் செய்திட வேண்டும்.

அடுத்த ஆண்டு (2023) ஜூன் 3-ஆம் நாள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா. அதற்கு முன்னதாக, தலைவர் கலைஞரின் 99-ஆவது பிறந்த ஆண்டில் கழகத்தின் சார்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்' நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைதி தவழும் சமூகநீதி நிலமான தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில், சுயமரியாதை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும்" என்று அதன் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

Stalin says that Let s dedicate the victory of India bloc to Karunanidhi

என்றென்றும் கலைஞர்- எங்கெங்கும் கலைஞர் என்பதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நூற்றாண்டின் மைய நோக்கமாக அமைந்திருந்தது. தலைமைக் கழகம் தொடங்கி மாவட்டக் கழகம், கழகத்தின் சார்பு அணிகள் என ஒவ்வொருத் தரப்புக்குமான பணிகள் திட்டமிடப்பட்டு, அவற்றை ஆண்டு முழுவதும் நிறைவேற்றிடச் செய்வதே முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டின் செயல்பாடாக அமைந்தது.

நூற்றாண்டு தொடங்கிய 2023 ஜூன் 3 அன்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய ரயில் விபத்தில் மக்கள் பலர் இறக்க நேரிட்டதால், அவர்களுக்காக நம் துயரைப் பங்கிட்டு, மீட்புப் பணியில் நம்மால் ஆன உதவிகளைச் செய்திட வேண்டும் என்பதில்தான் முதன்மையான கவனத்தைச் செலுத்தினோம். மக்கள் நலன் காப்பதே கலைஞரின் நூற்றாண்டின் சிறந்த பணியாக இருக்கும் எனத் தீர்மானித்து கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனான நான் அந்த முடிவினை எடுத்தேன்.

ஜூன் 7 அன்று சென்னையில் மிகப் பிரம்மாண்டான வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் மாநாடு போல நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிற மாநிலங்களிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டைக் கழக உடன்பிறப்புகள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். மாவட்டக் கழகத்தின் சார்பில் 'ஊர்தோறும் கலைஞர்' என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும், கிளைகளிலும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றுதல், கலைஞர் செய்த சாதனைகளையும், தற்போதைய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றுடன் தொகுதிகள்தோறும் தலைவர் கலைஞரின் மார்பளவுச் சிலையினை நிறுவுதல் என்ற திட்டமும் வகுத்தளிக்கப்பட்டு, பல மாவட்டங்களிலும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை கம்பீரமாக உயர்ந்து நிற்பதை அவரது உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள். விண்ணைத் தொடுவது போல நெடிதுயர்ந்த கொடி மரத்தில் இருவண்ணக் கொடி பிரம்மாண்டமாய் அசைந்தாடுவதைப் பல இடங்களில் கண்டிருப்பீர்கள்.

இளைஞரணியின் சார்பில் தொகுதிகள்தோறும் படிப்பகங்கள் அமைக்க வேண்டும் என்ற செயல்திட்டத்தைத் தலைமைக் கழகம் வகுத்தளித்தது. பல தொகுதிகளில் தரமான நூலகங்களை இளைஞரணி உருவாக்கியிருப்பது முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பெருமை சேர்த்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் தமிழினத்தைத் தட்டி எழுப்பும் கருத்துகளை எழுதிக் குவித்தவர் தலைவர் கலைஞர். தமிழன்னைக்கு அணிகலனாக இலக்கியப் படைப்புகளைப் படைத்தளித்தவர். ஏராளமான நூல்களை எழுதியவர். அவர் பெயரில் நூலகம் என்பதும் அதனை எதிர்காலத் தலைமுறைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைத்திருப்பதும் மிகச் சிறப்பான நடவடிக்கைகளாகும். மாவட்டவாரியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தி சிறந்த 100 பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் பணியையும் இளைஞரணி மேற்கொண்டுள்ளது.

மாணவரணி சார்பில் பல கல்லூரிகளிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டிருப்பதுடன், தலைவர் கலைஞர் தன் மாணவப் பருவத்தில் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை மீண்டும் அனைத்துக் கல்லூரிகளிலும் கழக மாணவரணி உருவாக்கி வருகிறது. மகளிரணி சார்பில் 'கலைஞர்100' வினாடி வினாப் போட்டி, பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டதுடன், தென்சென்னையில் இந்திய அளவிலான பெண் அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்ற பிரம்மாண்டமான மாநாடு போன்ற பொதுக்கூட்டம் மிகச் சிறந்த முறையில் நடத்தப்பட்டு, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. மகளிர் நலன் காக்கும் மகத்தான திட்டங்களை வழங்கிய தலைவர் கலைஞரின் புகழைப் போற்றியது.

இலக்கிய அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், கலை-இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞரின் படைப்புகள் சார்ந்த நிகழ்வுகள், சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள், பொறியாளர் அணி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள், வர்த்தகர் அணி சார்பில் கலை விழாக்கள், மருத்துவ அணி சார்பில் கருத்தரங்குகள் - மருத்துவ முகாம்கள், சுற்றுச்சூழல் அணி சார்பில் மரம் நடும் நிகழ்வுகள் எனத் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் குறுங்காணொளிகள் (ரீல்ஸ்) உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதில் கழகத்தினர் மட்டுமின்றி, பொதுமக்களும் தலைவர் கலைஞரின் சாதனைகளை எடுத்துரைத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. #கலைஞர் 100 என்ற ஹேஷ்டேக்கில் இவற்றைப் பார்வையிட முடியும் என்பதோடு, 2023 ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவரை வாழ்த்திப் பதிவிட்ட இந்த ஹேஷ்டேக் ஒரு மில்லியனைக் கடந்து சாதனைப் படைத்தது. அயலக அணி சார்பில் வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை அங்குள்ள கழகத்தினர் உணர்வுப்பூர்வமாக நடத்தியுள்ளனர். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் அணி, தொண்டர் அணி, மகளிர் தொண்டர் அணி, அமைப்பு சாராத் தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர்கள் அணி எனக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு அணி சார்பிலும் போட்டி போட்டுக் கொண்டு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரைக் கொண்டாடி மகிழ்வதுடன், கட்சிக்கு அப்பாற்பட்ட பலரும் தங்கள் நன்றியினை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊர்கள்தோறும் வளர்த்தெடுத்தவர் தலைவர் கலைஞர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்து வலிமைப்படுத்தியவரும் தலைவர் கலைஞர்தான். அவருடைய நூற்றாண்டில் கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல்திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தன்னால் கழகத்திற்கு என்ன நன்மை என்று நினைப்பவர்கள்தான் கழகத்தின் இரத்தநாளங்கள் என்றவர் கலைஞர். அத்தகைய இரத்தநாளங்களாகக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் செயலாற்றி, ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் நாம் மேற்கொண்டுள்ள அரிய பணியாகும்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.

இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.

ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக 'கலைஞர் 100' என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். 'இந்தியா'வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+