“இந்த அரட்டல்.. மிரட்டல்.. உருட்டல் எல்லாம் எங்ககிட்ட நடக்காது”.. பாஜகவை நேரடியாக தாக்கிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களின் அரட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கான உண்மையான காரணம் மக்களுக்குத் தெரியும். எனவே, இந்த அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்" என முதல்வர் ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசி உள்ளார்.

மேலும், நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்றும் பேசியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Stalin Warns Rivals DMK Will Confront Intimidation with Political Strength

திமுக மா.செக்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். திமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலுக்குக் கண்டனம் தெரிவித்தும் மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும்; தி.மு.க எதிர்கொள்ளும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான்! இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும். தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

பா.ஜ.க தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.கவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள்

நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் - மிரட்டல் - உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பா.ஜ.கவின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் ஊருக்கு போங்க

அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.

வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.

தொண்டர்கள் தான் எல்லாம்

பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+