தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மைனாரிட்டிகள் நிலை! சோனியா காந்தியிடம் ஹசீனா சையத் குமுறல்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மைனாரிட்டிகளுக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என்று சோனியா காந்தியிடம் நேரடியாக முறையிட்டுள்ளார் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத்.
மைனாரிட்டி சமுதாயம்: தேசியளவில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை சமுதாய மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தாலும் கட்சிப் பதவிகளில் மைனாரிட்டிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதனை இன்று சென்னையில் சோனியா காந்தி நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் போட்டுடைத்துவிட்டார் ஹசீனா சையத்.

ப்ரியங்கா காந்திக்கு அழைப்பு: அதுமட்டுமல்ல தமிழ்நாட்டிற்கு ப்ரியங்கா காந்தி இனி அடிக்கடி சுற்றுப்பயணம் வர வேண்டும் என்றும் இந்திரா காந்தி சாயலில் இருப்பதால் ப்ரியங்கா காந்திக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் எனவும் பேசியிருக்கிறார். இந்தக் கோரிக்கையை கவனித்த ப்ரியங்கா காந்தி புன்னகைத்திருக்கிறார். ப்ரியங்கா காந்தியை தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய வருமாறு ஹசினா அழைப்பு விடுத்ததை சோனியா கவனிக்கத் தவறவில்லை.
சற்று உணர்ச்சிவசப்பட்டு: இதனிடையே அவருக்கு முன்னதாக பேசிய சிடி மெய்யப்பன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிலை குறித்து சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். அமைப்பு ரீதியாக ரீ ஸ்ட்ரக்சர் செய்யவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரஸ் இன்னும் நலிவடையக்கூடும் என உள்ளக் குமுறலை கொட்டியிருக்கிறார்.
கார்த்தி சிதம்பரம் தரப்பு: அதேபோல் இளைஞர் ஒருவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை தர வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட சோனியாகாந்தி, ஒவ்வொருவரும் கட்சிக்காக கடும் உழைப்பை செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டும் சோனியாகாந்தி முன் வைத்தார்.
மகளிர் உரிமை மாநாடு: 5 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் கனிமொழி கொடுத்த மதிய விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications