ஆட்சிக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு.. நீட் தேர்வு ரத்து என்னாச்சு? திமுக அரசை கேட்கும் மாணவ, மாணவிகள்.!
சென்னை : திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தேர்தலில் அளிக்கப்பட்ட பிரதான உறுதியான நீட் தேர்வு வழக்கு என்ன ஆனது என மாணவ மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Recommended Video
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. மே மாத 7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் முதன்முறையாக பொறுப்பேற்ற நிலையில் ஓராண்டு நிறைவடைந்தது.
இதனையொட்டி திமுகவினர் ஓராண்டு நிறைவு தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திமுகவால் சொல்லி ஆனால் செய்ய முடியாது திட்டங்கள் குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீட் தேர்வு ரத்து
குறிப்பாக திமுகவின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

ஓராண்டு திமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் இருந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு திமுக தற்போது ஆட்சிக்கு வந்ததும் அதிமுக செய்ததைப் போலவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. நீண்ட இழுபறிக்கு பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் அந்த மசோதாவானது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அது குறித்து குடியரசுத் தலைவர் என்ன முடிவெடுப்பார் என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மாணவிகள் கேள்வி
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உறுதியளித்து நிலையில் அந்த வாக்குறுதி என்ன ஆனது என மாணவ மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ஒன்இந்தியா தமிழ் சார்பாக மாணவ மாணவிகளை சந்தித்து திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் ஆட்சி குறித்து அதிருப்தி இல்லை எனவே கூறினாலும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களை திமுகவின் செயல்பாடுகள் சற்று விமர்சனத்திற்கு உரியதாகவே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆட்சி குறித்து விமர்சனம்
இதுகுறித்து கீர்த்தனா என்ற மாணவியிடம் பேசியபோது, " ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். எங்களை போன்ற இளம் தலைமுறை வாக்காளர்கள் திமுகவால் கண்டிப்பாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என நம்பி வாக்களித்தோம். இதேபோல எங்கள் நண்பர்கள் பலரும் வாக்களித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக ஆட்சிக் காலத்தைப் போலவே ஆளுநர் மீது பழி சுமத்தி திமுக தப்பிக்க பார்க்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு வேளை மாநில அரசால் அது முடியவில்லை என்றால் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததாகவே கருதப்படும். அதே நேரத்தில் மற்ற விஷயங்களில் திமுகவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையாக உள்ளது. உதாரணத்திற்கு மாணவிகளுக்கு உதவித்தொகை , இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார்.

மருத்துவர் கனவு
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான மாணவர்களின் முக்கிய கோரிக்கையான நீட் தேர்வு ரத்து என்ற முக்கிய விஷயம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் என் போன்ற பலரது மருத்துவ கல்வி கனவு கனவாகவே போய்விட்டது. வரும் ஆண்டுகளில் நீட் தேர்வு ரத்து திமுக கூடுதல் கவனம் செலுத்தி அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் பிரியதர்ஷினி என்ற மாணவி கூறியுள்ளார்.

தமிழக மாணவர்கள் கோரிக்கை
விஜயகுமார் என்ற மாணவரிடம் கேட்டபோது," திமுக அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலாவதாக நீட் தேர்வை ரத்து செய்யும் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தற்பொழுது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளனர். ஆனால் நீட் தேர்வை பொருத்தவரை அதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசிடமே உள்ளது. அதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரியவருகிறது. மேலும் நீட் தேர்வு குறித்து மக்களிடம் இருந்த எதிர்ப்பை தற்பொழுது திமுக அரசு திசைமாற்றி வருகிறது. மேலும் நீட் தேர்வு ரத்து செய்யும் பட்சத்தில் தமிழக மாணவர்கள் மருத்துவ கனவு எளிதாக நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உள்ளது" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications