Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive:செம ஸ்பீடில் உதயநிதி.. விரைவில் குடிசையில்லாத தொகுதியாக சேப்பாக்கம் மாறும்.. டிஆர்பி ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் குடிசையில்லாத தொகுதியாக உதயநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மாறும் என்றும் தொகுதி மக்களின் குறைகளை போக்க உதயநிதி அசுர வேகம் காட்டுகிறார் என்றும் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி கேள்வி பதில் வடிவில்:

கே: உங்களுக்கு பிறந்தநாள் என்றாலும் சரி மற்றவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து என்றாலும் சரி தடுப்பூசி கொடுங்கள், உணவு பூங்கா கொடுங்கள்னு கேட்கிறீர்கள், இந்த ஐடியா எப்படி வந்தது.

ப: கிடைக்கும் போதெல்லாம் பிட்டை போடுவதுதான். என் தொகுதிக்கு செய்ய வேண்டியது அத்தனை இருக்கிறது. அதற்காக மன்னார்குடிக்கு மட்டுமே செய்ய முடியுமான்னு கேட்பாங்கல்ல. எனவே கேட்பதை அவ்வப்போது கேட்டு வைப்போம். அதை விரைவில் செய்து தருவார்கள். 5 ஆண்டுகளுக்குள் அத்தனையையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுவாக கிப்ட் நமக்கு வாங்கிக் கொள்வதை விட மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்து அதை பார்க்கிறது சந்தோஷமாக இருக்கும். எங்கள் மக்களுக்கு அந்த கிப்ட்டை கொடுக்கணும் என கேட்கிறேன்.

T.R.B.Rajaa says that Udhayanidhi is working in his Chepauk constituency

கே: வாரிசு அரசியல் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: விமர்சிப்போருக்கு பதிலே எங்கள் செயல்பாடுதான். யாருடைய மகனாக இருந்தாலும் அரசியலுக்கு வந்து ஒன்றுமில்லாமல் போயுள்ளார்கள். அடிப்படை தொண்டர்களும் நல்ல இடத்திற்கு வந்துள்ளார்கள். அரசியலில் மக்கள்தான் எஜமானர்கள். இனிசியல் எல்லாம் மக்களிடம் செல்லாது. ஒரு முறை ஜெயித்து வரலாம். மீண்டும் மீண்டும் எல்லாம் வர முடியாது. மக்களிடம் போகும்போது வெறும் ராஜாதான், டிஆர்பி ராஜா கிடையாது.

வாரிசு அரசியல் என்று சொன்னவர்கள் முகத்தில் கரியை பூசி உட்கார வைத்துள்ளோம். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாகிவிட்டார். அவர் நினைத்தால் படத்தில் போய் நடித்திருக்கலாம். ஆனால் அவர் சேப்பாக்கம் தொகுதியில் இருக்கிறார். சென்னையில் குடிசையில்லாத பகுதியாக சேப்பாக்கம்தான் மாறும் என நினைக்கிறேன். அந்தளவுக்கு வேகம் காட்டுகிறார். கொளத்தூருக்கே டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. களத்தில் பணியாற்றினால் மட்டுமே மக்கள் பிரதிநிதியாக ஏற்பார்கள்.

கே: உதயநிதி- அன்பில் மகேஷ் பொய்யாமொழி- எழிலன்- உங்கள் 4 பேருக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து சொல்லுங்கள்

ப: நாங்கள் ஒரே வயது பிரிவினர். அதனால் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எங்களது மூத்தவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். மூத்தவர்கள் கலைஞரின் அமைச்சரவையில் இருந்ததால் எங்களுக்கு பல நுணுக்கங்களை சொல்லி தருகிறார்கள். தங்கம் தென்னரசு அவர்களும் எங்களுக்கு பணியாற்ற நிறைய சொல்லித் தருவார். அரசியலால் நாங்கள் நட்பாகவில்லை. உதயநிதியும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். எல்லாம் தாண்டி உடன்பிறப்புகள் என்ற ஒற்றை சொல்லில் எல்லாம் அடங்கியுள்ளது.

கே: கலைஞர், ஸ்டாலின், உதயநிதி.. இதில் யார் உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவர்.. அதாவது உணர்வுப்பூர்வமாக.

ப: இவர்கள் இருவருக்குமே கலைஞர்தான். அது போல் எனக்கு உணர்வுபூர்வமாக நெருக்கமானவர் கலைஞர்தான். அரசியலை நான் மிகவும் வெறுத்தேன். பின்னர் கலைஞரின் சாதனைகளை தெரிந்து கொண்டே வளர்ந்தேன். பின்னர் நாம் ஏன் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரக் கூடாது என நினைத்தேன். வந்தேன். என்னை போல் வெறுத்துக் கொண்டே போயிருந்தால் அரசியலில் அடுத்த தலைமுறை என்பது இல்லாமல் போயிருக்கும்.

கே: அரசியலைத் தாண்டி உங்களுக்கு எந்தெந்த துறைகளில் ஆர்வம் இருக்கிறது?

ப: விண்வெளி, வானியல் மிகவும் பிடிக்கும். தொல்லியல் துறை, போட்டோகிராபி, ரைபிள் ஷூட்டிங் பிடிக்கும். புதிதாக இருப்பது மிகவும் பிடிக்கும், புதிய தொழில்நுட்பங்களும் மிகவும் பிடிக்கும். தொழில்நுட்பமும் விவசாயமும் மிகவும் பிடித்திருக்கிறது. பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்கும் விவசாயம் குறித்து பிடிக்கும். 10 ஆண்டுகளாக எனக்கு விவசாயத் துறை மிகவும் பிடித்திருக்கிறது. முடிந்த அளவுக்கு அந்த துறையில் மாற்றங்களை கொண்டு வரலாம்.

கே: மன்னார்குடிக்கு எந்த திட்டமாவது செயல்படுத்த லேட்டானால் தாய் கிழவிகளின் சாபத்திற்கு ஆளாவீங்க என்று அமைச்சர்களை செல்லமாக மிரட்டி கேட்கிறீங்களே

: எனது தொகுதிக்கு தேவையென்றால் நான் எப்போதும் பார்க்கும் ராஜாவாக இருக்க மாட்டேன். ஆட்சியில் அமர்ந்தால்தான் நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே என் தொகுதிக்கு திட்டங்களை கொண்டு சேர்க்கும் போது வெறித்தனமான ராஜாவாகத்தான் இருப்பேன். மன்னார்குடியை மின்ன வைக்க ஒவ்வொரு நாளும் போராடி வருகிறோம். இன்னும் சில நாட்களில் மன்னார்குடிக்கு பல நல்ல திட்டங்கள் வரும் என நம்புறேன்.

கே: தாத்தா கலைஞர்- தலைவர் கலைஞர் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன

ப: தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர். யாரையும் புறக்கணிக்க மாட்டார். அது 1000 சதவீதம் உண்மை. அதனால் சொல்கிறேன், இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தலைவராக கோடிட்டும் காட்டுவார். அன்பான தாத்தாவாக அந்த கோட்டில் எப்படி நடக்க வேண்டும் என கற்று கொடுப்பார்.

கே: கலைஞரின் புகைப்படம் கடந்த இரு முறை எதிர்க்கட்சி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட போது நீங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் வைத்துள்ளார்களே அது குறித்து உங்கள் கருத்து

ப: எனக்கு மிகவும் சந்தோஷம். அப்போது இரு மூன்று பேரின் படங்களை வைத்தார்கள். அந்த கேப்பில் கலைஞரின் புகைப்படத்திற்கு பதில் வேறு யாருடைய படத்தையாவது வைத்து நிரப்பிவிடுவார்களோ என நினைத்தேன். 2011- ஆம் ஆண்டு எனது இருக்கை 232 ஆவதில் இருந்தது. சட்டசபையை முழுமையாக கற்றுக் கொண்ட இடம் அது. அந்த இடத்தில் தாத்தாவின் படம் இருக்க வேண்டும் என உண்மையில் யோசித்தேன். இப்படி வைப்பார்கள் என நினைத்து கூட பார்க்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதனால் தாத்தா போட்டோவுடன் செல்பி எடுத்தேன்.

கே: உங்களுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா

ப: வாழ்க்கையிலேயே நடிக்கக் கூடாது என நினைக்கிறேன். இப்போது சினிமாவில் யாரும் நடிப்பதில்லை, ஆனால் வாழ்க்கையிலும் அரசியலிலும் ஏன் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. உண்மையான யதார்த்தமான படங்களைத்தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது. மக்களுடைய எண்ணவோட்டத்திற்கு ஏற்ப பயணித்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முறையில் இருக்கலாம்.

கே: ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 100-ஆவது தினம் குறித்தும் சுதந்திர தினவிழாவில் கொடியேற்றுவது குறித்தும் உங்கள் கருத்து என்ன?

ப: இந்தியா முழுவதும் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். ஜனநாயகத்தின் பாதுகாவலன். முதல்வர்கள் கொடியேற்ற கூடாதா என கேட்டு சுதந்திர தினத்தன்று முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய முதல்வர் கலைஞர். அந்த வழியில் வந்த ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றும் கண்கொள்ளா காட்சியை காண ஆவலாக உள்ளோம். மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வு இது. அந்த கொடியை ஏற்றுபவர் நம்மில் ஒருவர் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவர் கொடியை ஏற்றும் போது நாமே அந்த கொடியை ஏற்றுவது போல் உணருவோம் என்றார் டிஆர்பி ராஜா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+