நள்ளிரவு 1 மணிக்கு அமைச்சர்களுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையில் புகழ்ந்த எ.வ.வேலு
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு 1 மணி அல்லது 3 மணிக்கு கூட அமைச்சர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், எப்போது தூங்குகிறார் என்றே தெரியவில்லை என்றும், அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வேலு நேற்று சட்டசபையில் பேசினார்.
அப்போது ஸ்டாலின் குறித்து பல புகழாரங்களை அவர் சூட்டினார்.

எப்போ தூங்குகிறார்
இதோ அவரது உரையிலிருந்து: நான் மனம் விட்டு பேசுறேன். முதல்வர் ஸ்டாலின் எப்ப தூங்குகிறார் என்றே தெரியவில்லை. அமைச்சர்களுக்கும் கூட தெரியவில்லை. இரவு 1 மணிக்கு, 3 மணிக்குலாம் முதல்வரிடமிருந்து போன் வருகிறது. அந்த அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரமும் உழைக்கிறார் என்று தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாடு
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதை கட்டுப்படுத்த ஸ்டாலின் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. எனவே, மக்கள் பலர் காப்பாற்றப்பட்டதோடு, இப்போது ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கும் நிலை உருவாகியுள்ளது என்பது பொது வெளியில் கூறப்படும் பாராட்டாக உள்ளது.

சட்டசபையில் பதிவு செய்த வேலு
குறுகிய காலத்தில் பல திட்டங்களை கொண்டு வருவதில் ஸ்டாலின் உழைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது என்று திமுகவினர் பலரும் கூறி வந்தனர். தற்போது அமைச்சர் வேலு அதையே சட்டசபையில் பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் உழைத்தால்தான் குறுகிய காலத்தில் தமிழகத்தை இந்த அளவுக்கு மாற்ற முடிந்துள்ளது என்பது வேலு பேச்சில் எதிரொலித்தது.

எடப்பாடி புகைப்படம்
அம்மா உணவகம் அதே பெயரில் செயல்பட அனுமதித்துள்ளது, பள்ளி மாணவர்களுக்கான 65 லட்சம் புத்தக பைகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்களை முந்தைய அதிமுக அரசு அச்சடித்தாலும், அதை அப்படியே தொடர உத்தரவிட்டது போன்றவை அதிமுக தரப்பிலும் ஸ்டாலினுக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளன. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், ஸ்டாலின் அரசை பாராட்டியுள்ளார்.

புகழ வேண்டாம்
அதேநேரம், தன்னை புகழ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உங்களின் உரைகளில் உங்களை ஆளாக்கிய, உங்களை உருவாக்கிய நமது முன்னோடிகளைக் குறிப்பிட்டுப் பேசுவது முறை. ஆனால், நேரத்தைக் கருத்தில்கொண்டு இதைக் கேள்வி நேரத்துக்கு முன் பயன்படுத்தக் கூடாது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இதுதான் எனது கட்டளை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். எ.வ.வேலு நேற்று ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சட்டசபையில் புகழ்ந்துரைத்த நிலையில்தான் ஸ்டாலின் இவ்வாறு ஒரு உத்தரவையும் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications