தமிழக தலைமை செயலாளர் மாற்றம்.. வெட்கக் கேடானது! தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் காட்டம்
சென்னை: தமிழக தலைமை செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் இது வெட்கக் கேடானது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன" என்று கூறியுள்ளார்.
மேலும் கூறிய ஸ்டாலின், "எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக - பாஜக அடங்கிய "என்.டி.ஏ." கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்" என்று கூறியிருக்கிறார்.

தலைமைச் செயலாளர் மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக நடப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்த நிலையில் தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் என்பவரை மாற்றி சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்து இருக்கிறது. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும் மாற்றப்பட்டுள்ளார். இந்த இடத்திற்கு ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த உத்தரவை உடனே அமல்படுத்தி பணியில் சேர்ந்தது குறித்து மாலைக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வாதிகாரப் பாதையில்
நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பாஜகவிற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
சீப்பை ஒளித்து வைத்து விட்டால்
தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் கைகோர்த்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் "தலைமைச் செயலாளர்" "டிஜிபி" ஆகியோரை மாற்ற பாஜக தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக - பாஜக அடங்கிய "என்.டி.ஏ." கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!












Click it and Unblock the Notifications